Sunday 16 November 2014

என்னவோ செய்யும் உணர்வு







மூக்க முதலியார், கருத்த முதலியார் இரண்டு பேரிடமும் தான் அம்மாச்சி சேலைகள் எடுப்பாள்.( சேலை வாங்குவது  என்று சொல்ல மாட்டார்கள். சேலை எடுப்பது என்று சொல்வார்கள்.). மூக்க முதலியார், கருத்த முதலியார் இரண்டு பேருமே கட்டையாகத்தான் இருப்பார்கள். வீட்டு வாசலுக்கே கொண்டுவந்து காட்டுவார்கள். அவர்களே தறிக்குழியில் உட்கார்ந்து அவர்களே நெசவு செய்து கொண்டுவரும் நூல் சேலைகள்.

 ஆச்சி சேலை எடுக்கும் போது நான் பக்கத்தில் உட்கார்ந்திருப்பேன். எனக்கு சேலைகளில் இருந்து வரும் சாய வாசனையும் கஞ்சி வாசனையும் பிடிக்கும். பேரம் பேசுவார்கள் தான், பேரம் சுருக்கமாக இருக்கும். ‘இருந்தாங்குடியா எல்லாரும் பேசி வச்ச மாதிரி ஒரேயடியா சொல்லுதீங்க. மூக்க முதலியார் யானை விக்கிறதுக்கு ஆரம்பிச்சது தெரியாமல் போச்சே’. என்று ஆச்சி ஏதாவது சொல்வாள்.

 ‘ஆச்சி  வாக்கு பொன்னா இருக்கட்டும். மூக்க முதலி அப்படியானை விக்கிற காலம் வந்தால், சத்தங் காட்டாமல் வந்து, இந்த நடுவீட்டுக் கல்தூணில விடிய முந்திக் கெட்டிவச்சுட்டுப் போயிரமாட்டேன். உலகத்துல பைசாவா முக்கியம்.?’ என்று அவர் ஏதாவது சொல்லியிருப்பார். ஆச்சி இரண்டு எடுக்க நினைத்தவர், கூடுதலாக ஒரு சேலை எடுத்துக்கொள்வார்.

அப்போது எனக்கு ஆறு ஏழு வயது இருக்கும். வேம்படித் தெருவா, நடுத் தெருவா, பெரிய தெருவா தெரியவில்லை. ஏதோ ஒரு அம்மன் கோவிலில் தீக்குழி இறங்குகிறதைப் பார்க்க அம்மாச்சி என்னைக் கூட்டிக்கொண்டு போயிருந்தாள். முதல் முதல் பார்த்த அந்த தீக்குழிக் கங்கு இன்னும் ஒரு கனல்பாய் போல என் முன் இன்னும் கிடக்கிறது. சரி. சாமி கும்பிட்டு ஆயிற்று. வலது உள்ளங்கையில் வாங்கின திருநீறை இடது கைக்கு மாற்றி, அம்மாச்சி எனக்குத் திருநீறு பூசிவிட்டாள். தேங்காய்ப் பூ வாங்கிக்கொடுத்தாளா இல்லையா என்பது அயத்துப் போயிற்று. வீட்டுக்குப் போக வேண்டியதுதான்.

ஆச்சி நேராக வீட்டுக்கு வரவில்லை. முடுக்கு முடுக்காக எங்கேயோ கூட்டிக்கொண்டு போனாள்.  ஒரு பூவரச மரம் நின்றது ஞாபகம் இருக்கிறது. ஒரு கறிக்கடையைக் கூடத் தாண்டிப் போனோம். ‘எங்க ஆச்சி போறோம்?’ என்று கேட்டாலும் ஆச்சி சொல்லவில்லை.’வா’ என்று மட்டும் கொஞ்சம் கழித்துச் சொன்னாள். ஒரு வீட்டின் முன் நின்றாள்.

‘முதலியார் இல்லையா?’ என்று சத்தம் கொடுத்தாள்.  முதலியார் இல்லை. வெளியே போயிருந்தார், அந்த வீட்டுப் ’பொம்பிளையாள்’ தான் வந்தார். ஆச்சியைத் தெரியும் போல. ‘தீக்குழி பார்க்க வந்தோம்’ என்று ஆச்சி சிரித்துக்கொண்டே நடையேறினாள். நான் வெளியே நின்றேன். பெயர்ந்து செங்கல் தெரிந்த நடை எனக்குப் பிடித்திருந்தது.
‘உள்ளே வா, முருகா; என்று ஆச்சி சொல்லிவிட்டுப் பேச ஆரம்பித்தாள்.கொண்டுவந்து கொடுத்த தண்ணீரை அண்ணாந்து குடித்துக்கொண்டே சொன்னாள்

’எத்தனை வருஷம் முதலியார் எங்க வீட்டுக்கு நல்லது கெட்டதுக்கு வந்து போயிக்கிட்டு இருக்காரு. உங்க வீடு போற வாற பாதையில தான் இருக்குண்ணு தெரியும்.  இதுக்குண்ணு எடுத்துக் கூட்டி வராட்டாலும், வாய்க்கும் போது எட்டிப் பார்த்துட்டுப் போலாம்னு தோணுச்சு. . இப்படி யாரையாவது ஒருத்தரை ஒருத்தர்  அப்பப்ப பார்த்துக்கிட்டா நல்லாத்தானே இருக்கு’, அம்மாச்சி தன் கையால் அந்த வீட்டுச் சின்னப் பெண்குழந்தை நெற்றியில் பூசினாள்.

எனக்கு இப்போது உள்ளே போகத் தோன்றிற்று.
நான் பார்த்த முதல் தறி அங்கே இருந்தது. அதன் மரச் சட்டங்கள், அதில் பாதி நெசவில் இருந்த ஒரு ரோஸ் நிறச் சேலையின் நூல் இழைகள் என்னை என்னவோ செய்தன.

அந்த ’என்னவோ செய்த’  உணர்வு இன்றும் என்னிடம் அப்படியே இருக்கிறது. என்னவோ செய்யும் உணர்வால் தான் இதை எழுதுகிறேன். இதை மட்டுமல்ல, எதை எழுதவும் காரணமாக இருப்பது அந்த என்னவோ செய்யும் உணர்வுதான்.


3 comments:

  1. விற்பவருக்கும் வாங்குபவருக்குமான தொடர்பும் உறவும் பரஸ்பர மதிப்பும் அன்றைய காலகட்டத்தில் இருந்த இருப்பை நினைத்துப் பார்க்கையில் இன்றைய நிலையை ஒப்பிட்டுப் பெருமூச்சு எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை.

    ReplyDelete
  2. ம் அது ஒரு கனாக்காலம்

    ReplyDelete