Tuesday 17 September 2013

முன் சென்றவரும் முன் செல்பவரும்..



அவர் மீண்டும் இந்த வழக்கமான பாதையில், எங்கள் வீட்டை ஒட்டி, நடந்து செல்வதை இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு இப்போதுதான் பார்க்கிறேன். கடைசியாக அவரைப் பார்க்கும் போது அவர் வீடு துக்கத்தால் நிரம்பியிருந்தது. அவருடைய மனைவி கண்ணாடிப் பேழையும் ஆழ் துயிலில், ஓட்டத்தை ஓடி முடித்திருந்தார். பிரார்த்தனைப் பாடல்களாலும் வேத வசனங்களாலும் அடர்ந்திருந்த சுவர்களின் மத்தியில் நின்ற அவருடைய கையைப் பிடித்து நிற்கும் சிறுபொழுதைக் கூட நான் அடையமுடியாத நிலையில் இருந்தேன்.

அவர் ஒரு கல்லூரி முதல்வராகவும், அவர் மனவி ஒரு கல்லூரிப் பேராசிரியை ஆகவும் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றவர்கள். இந்தக் குடியிருப்புப் பகுதியின் ஆதிக் குடிகளில் அவர்கள் முக்கியமானவர்கள். இந்தப் பகுதி மக்கள் நலச் சங்கத்தின் ஆரம்ப அமைப்பில் அவர் பெயர் உண்டு. இப்போது வளர்ந்து காற்றுத் துளாவும் வேப்பமரங்கள் கன்றுகளாக இருக்கும் போது அவர் பார்த்திருப்பார். அவரால் நடப்பட்டவை கூட சில இருக்கும். இப்போது தூர்ந்து போகத் தயாராகி வரும், பாலிதீன் தாட்கள், தக்கைக் கழிவுகள் மிதக்கும், கல்வெட்டாங்குழி நிரம்பிக் கிடக்கும் மழைக் காலங்களை அவர் அறிந்திருப்பார். இந்தப் பகுதி, கட்டிடங்களால் நெரிசலடைவதற்கு முன்பு நின்ற உடைமரப் பூக்களின் வாசத்தில் நிரம்பிய வேனில் காலங்களை அவர் கடந்திருப்பார். ’முள்ளு கிடக்கும் , பாத்துப் போங்க. டயர் பஞ்சராயிரும்’ என வழக்கமாக இங்கே மீன் விற்கிறவர், புதிதாகக் கோலப்பொடி விற்கவந்தவரிடம் சொல்லியிருப்பார்.

நாங்கள் இங்கே குடிவந்த முதல் சில நாட்களிலேயே, அவர் இந்தப் பக்கம் நடை செல்வதைப் பார்த்திருக்கிறோம். முதல் நாள் பார்க்கும் போதே பேசினார், ஆயுள் முழுவதும் பார்த்தால் கூட ஒரு வார்த்தை பேசத் தயாராக இல்லாத இந்தக் காலத்தில். ஜாக்கிரதையாக இருக்கச் சொல்வார். தெரு விளக்கு எரியவில்லை எனில், தண்ணீர் வரவில்லை எனில் எங்கே புகார் செய்ய வேண்டும் என வழி காட்டுவார். மாநகராட்சிக்கு கூட்டாகப் புகார் மனுக் கொடுக்கவேண்டும் எனத் தூண்டுவார். மாமிசக் கழிவுகளைக் கொட்டி, இந்தப் பகுதியின் காற்றை மாசுபடுத்துகிறவர்கள் மேல் தனி நபராக நடவடிக்கை எடுத்தார்.

ஒருகட்டத்தில், இரண்டு பேரும் ஓய்வு பெற்ற பின், அவர் முன்னே நடந்து செல்ல அவருடைய மனைவி சற்று மெதுவாக நடந்து செல்வார்கள். பத்து முப்பது அடி அவர் முன்னால் போய்விடுவார். இவர் வாசல் தெளித்துக்கொண்டு இருக்கிற, கோலமிடுகிற எங்கள் வீட்டு, அடுத்த வீட்டுப் பெண்களிடம் பேசிக்கொண்டு நிற்பார். அவர் கூப்பிடமாட்டார். இங்கேயே பார்த்துக்கொண்டு நிற்பார். ‘ஸார், ரொம்ப நேரமாக உங்களுக்காக நிற்கிறார்’ என்று யாராவது சொன்னாலும், பேச்சைப் பாதியில் விட மனது இராது. ஓய்வுபெற்ற பேராசிரியைக்கு உள்ளே இருக்கும் அடிப்படையான பெண் இந்தக் காலைநேரப் பேச்சுகளை நடையை விட விரும்பியதில் ஆச்சரியம் இல்லை.

எல்லா நாட்களிலுமா பேசுகிற மன நிலை இருக்கிறது? அவர் முன்னால் வேகமாக நடக்க இந்த அம்மா, மெதுவாக அவர் பின்னால் போகும். அவர் திரும்பித் திரும்பி, பின்னால் இவர் வருகிறாரா என்று பார்த்துக்கொண்டே போவார். ஆட்டுக்குட்டி வருகிறதா என்று பார்த்துக்கொள்கிற மேரி.

‘வருகிறேன், வருகிறேன். நீங்கள் போங்கள்’ என்று சைகையில் இங்கிருந்து கையசைக்க, சார் முக்குத் திரும்பு முன் இந்தப் பக்கம் ஒரு முறை மீண்டும் பார்த்துக்கொள்வார்.

இன்று அவர் முகத்தைப் பார்க்கமுடியவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில், அவர் மனைவியை இழந்த துக்கம் வடிந்துவிட்டதா என்று தெரியவில்லை. தனிமை அவர் அசைவுகளில் எழுதப்பட்டிருக்கிறதா என்பதை நிதானிக்க முடியவில்லை.

ஒன்றை அவரால் மாற்றிக்கொள்ள முடியவில்லை. திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே நடந்தார். சற்று அங்கங்கே நிற்கக் கூடச் செய்தார்.

பின்னால் அவர் மனைவி இன்னும் வந்துகொண்டுதான் இருக்கிறார் என்பது அவருக்குத் தெரியும் இல்லையா.
6Like ·  · Promote · 

No comments:

Post a Comment