Friday 13 September 2013

முக நக - 20.









எங்கள் அப்பாவுக்காவது இருபத்திரண்டு இருபத்துமூன்று ராகங்கள் தெரியும் என்று சொல்வார். எனக்கு இசையில் ஆனா ஆவன்னா கூடத் தெரியாது. ஆனாலும் 95ம் ஆண்டு தொடக்கம் கையில் கிடைப்பதை எல்லாம் காதில் போட்டுக்கொண்டு இருக்கிறேன். அதில் என்ன இருக்கிறது, என்ன கிடைக்கிறது என்று எல்லாம் புரியவில்லை.. ஏதோ இருக்கிறது. ஏதோ கிடைக்கிறது. அதை மட்டும் உணர்கிறேன்.
இன்று காலை ஈரோடு கதிர் கொடுத்த இணைப்பில் அருணா சாய்ராமின் ன்ன கவி பாடினாலும் உந்தன் உள்ளம் இரங்கவில்லைகேட்டேன். அது காணொளி, காணொலி. அருணாசாய்ராம் குரலுடன் முகம் கரைந்துகரைந்து அருவாகி உருவாகி, இலதாகி உளதாகிறது. பக்கத்தில் இருக்கிற மிருதங்கக் கலைஞனை அருணாவின் மெய்மறப்பு, அதற்கு முந்திய கணத்தில் அவர் இருந்ததை விட அழகாக்குகிறது.அன்னையோ அறியவில்லை. தந்தையோ நினைக்கவில்லை’ .’பட்சமுடனே அழைத்துப் பரிசளிக்க யாருமில்லை’. வனத்தில் பறந்திறங்கும் ஒற்றை இறகின் வெயில் பளீர் போல குரல் அங்கும் இங்கும் அசைந்து, பிரமிள் சொன்ன தீராத பக்கங்களைஅந்தக் குரல் எழுதிவிட்டு எங்கோ நகர்ந்துவிடுகிறது.
அதனுடைய தொடர் இழை போல, கிருஷ்ணமூர்த்தி ராமசாமி இணைத்திருக்கும் மதுரை சோமுவின் என்ன கவி பாடினாலும்’. இது ஒலி மட்டும். சோமு தெரிய மாட்டார். லால்குடி தெரிய மாட்டார். மிருதங்கக்காரர் தெரிய மாட்டார். ஆனால் இசையின் பிரசன்னம் இருக்கும். இதற்கு முன் இறகு மாதிரிப் பறந்தது. இப்போது சிறகசைக்கும் ஒரு இசைப்பறவையாகி எவ்வும். இடையிடையே லால்குடிக்கு மதுரை சோமு சொல்கிறசபாஷ்களில் நமக்குக் கண் தளும்பும். இன்னும் என்ன சோதனையோ?’, ‘இக்கணத்தில் நீ நினைந்தால், எமக்கோர் குறைவுமில்லைஎன்ற இடத்தில் இரு கன்னங்களிலும் வழியும்
அது நீலமனியா,சஹானாவா, கருணை ரசமா பக்தி பாவமா எதுவும் எனக்குத் தெரியாது. ’(அ)லட்சியமோ உனக்கு, உன்னை நான் பிரிவதில்லைஎன்று மனம் திரும்பத் திரும்ப அரற்றுகிறது கேட்ட நேரத்தில் இருந்து. நான் இப்போது ரவிசுப்ரமணியனுடன் இருக்க விரும்புகிறேன். அவரும் இதைப் பாடிக் கேட்டிருக்கிறேன். மதுரை சோமுவின் அத்தனை ராகமும் பாவமும் குரலிலும் கண்மூடலிலும் ஒளிர ரவி, எங்களுக்கு மத்தியில் இருந்து, இல்லாமல் ஆகி இசைத்துக்கொண்டிருக்கிறார். இது ஒரு நிலை. இது ஒரு வரம். இசைக் கலைஞர்களுக்கு மட்டும் தான் இவை சாத்தியம். எதிரே இருக்கிறவர்களை மறந்து, கண் மூடித் துறந்து அப்பால் ஒரு பெருவெளியை அடைந்துவிடுகிறார்கள். அப்படிக் கண்களை மூடி இசைக்கையில் அவர்கள் ஒளிரத் துவங்கிவிடுகிறார்கள்.
கண்மூடுதலின் ஒளிர்தலுடன் ரவிசுப்ரமணியன், இதோ பாடிக்கொண்டு இருக்கிறார். என்ன கவி பாடினாலும்.... '

2 comments:

  1. நீலமணி தான் இது. ராகங்களின் சாயலைத் தான் ராகங்கள் என்கிறோம். எல்லாமே சாயல்கள் தான் என்று தோன்றுகிறது... என்னுடைய திருப்பதி ஆசாரியில் நீங்கள் முத்தையா மாமாவைப் பார்த்தமாதிரி... எனக்கு மூன்று அல்லது நான்கு இசைஞர்களிடம் இது போலத்தோன்றும்... மதுரை மணி, எம் எல் வி, மதுரை சோமு, அருனா சாய்ராம்... என்று எவரையும் எவருடனும் ஒப்பிடமுடியாது என்றாலும்... இசை என்ற அரூப சித்திரத்தில் இவர்கள் ஒன்றாகவே தெரிகிறார்கள்...எனக்கு. ரவி சுப்ரமணியம் சில மேடைகளில் பாடிக் கேட்டிருக்கிறேன்... சிறப்பாகவே பாடியிருப்பார்... குமிழ் ஊற்றுச்சுனை...

    ReplyDelete
  2. எங்களுக்கு உங்கள் எழுத்துக்களை வாசிப்பதே அற்புதமான இசை கேட்பது போல எங்கெங்கோ இழுத்துச் சென்றுவிடுகிறது.

    ReplyDelete