Wednesday 7 August 2013

அந்தப் பெண்ணைத்தான்...










இரண்டு நாட்களாக எல்லா தொலைக்காட்சி அலைவரிசைகளின் செய்தி வாசிப்புக்களிலும் காவேரியும் கொள்ளிடமும் அமராவதியும் பவானியும் கரைபுரண்டு பொங்கிவருவதைக் காட்டுகிறார்கள். பார்த்துக்கொண்டிருக்கும் இந்த அறைக்குள் தண்ணீர் புரண்டு புகுவது போல இருக்கிறது. அதுவும் ஹொகனேக்கல் அருவி புகைப்படலமாய்த் திரள்வதைப் பார்க்கையில் அதில் குதித்துவிடலாம் போல ஒரு பரபரப்பு. மெய்யாகவே, இந்த ஏதோ ஓர் நுரைக்கும் நீர்ப்பெருக்கில் நான் அடித்துச் செல்லப்பட விரும்புகிறேன். சுழன்றுகொண்டே நதியில் ஏகும் ஒரு பலா இலை அல்லது புன்னை இலை மினுமினுப்புடன் வெகு காலமாய் நான் உதிரக் காத்திருக்கிறேன்.

நேற்றைய ஹொகனேக்கலைப் பார்த்தது போலத்தான் , ஒரு மாதத்திற்கு முன் , இதே போல ஒரு தொலைக்காட்சிச் செய்தியில் குற்றாலம் அருவி எத்தனையோ பத்தாண்டுகளுக்குப் பின் இப்படி ஒரு நீர்த்துவ தாண்டவம் ஆடுகிறது எனக் காட்டிக் கொண்டு இருந்தார்கள். இந்தத் தொலைக்காட்சியர்களுக்கு என்ன வேலை? யாரிடமாவது, குறிப்பாக பெண்களிடம், (அவருடைய கணவர் பிள்ளையை வைத்துக்கொண்டு கடைசி வரை ஒரு வார்த்தை பேசாமல் சிரித்துக் கொண்டே இருக்க) ஒலிவாங்கியை நீட்டுவார்கள். அவர்கள் தொலைகாணப்படும் பரவசத்தில், “ சீஸன் சூப்பரா இருந்துது. எவ்வரிபடி நல்லா எஞ்சாய் பண்ணினோம். ஃபால்ஸ்ல குளிக்கறது த்ரில்லா இருக்கு. நெக்ஸ்ட் இயரும் ஷ்வேரா வருவோம்” என்று அவரிடம் கையைத் தூக்கிப் போடும் குழந்தையைத் தவிர்த்துக்கொண்டே, காமெராவைப்பார்த்து சிரிப்பார்கள்.

அன்றைக்கு அருவியில் சுற்றுலா பயணியர் யாரையும் குளிக்க அனுமதிக்கவில்லை. யாருமே அற்ற ஒரு ஆதிவனாந்திரத்தில், தன்னுடைய அத்தனை சுதந்திரத்தையும் விடுதலையையும் தானே அனுபவிக்கிறது போல, நீரின் பேரிசையுடன் அருவி விம்மித் திரிகூடராசப்பனைத் தேடிக்கொண்டிருந்தது. அதைத் தொலைக் காட்சியில் பார்க்கிற எனக்கு தண் எனும் ஒரு பெரும் தீ பற்றி எரிவதாக அருவி தழலுற்று நெளிந்தது. கும்பிடத் தோன்றியது.

அப்போதுதான் அந்தப் பெண் முன் ஒலிவாங்கி நீண்டதைக் காட்டினார்கள். ஒரு நடுத்தரக் குடும்பத்து, நடுத்தர வயதுப் பெண் அவர். அந்த ஒலிவாங்கியை அவர் பொருட்படுத்தவில்லை. அவர் கண்களில் அருவி இருந்தது. முகத்தில் அந்தத் தண் எனும் தீ எரிந்தது. தூரத்து அகலின் வெளிச்சம் படுவது போல முகத்தில் மகிழ்ச்சியின் மெல்லிய பிரகாசம் இருந்தது. அதிகம் சொல்ல வில்லை. சுருக்கமாகத்தான் சொன்னார். “ இதுதான் முதல் தடவையாக வருகிறோம். அருவியில் குளிக்க முடியவில்லை. அதைப் பற்றிப் பரவாயில்லை. இப்படி ஒரு விஸ்வரூபத்தில் அருவியைப் பார்க்க முடிந்ததே. அதுவே போதும்”. இதைச் சொல்லும் போது அவர் கைகள் கும்பிடுவது போல இணைந்து கொண்டன. அருவியைத்தான் கும்பிட்டிருக்கவேண்டும்.

அருவியை அல்ல. இன்றைக்கு அந்தப் பெண்ணை எனக்குக் கும்பிடத் தோன்றுகிறது. என்ன துயரம் எனில், அருவி அங்கேயேதான் இருக்கும். அருவியை மீண்டும் பார்த்துவிடலாம். அந்தப் பெண்ணைத்தான் பார்க்கவே முடியாது.

%

2 comments:

  1. மதிப்பிற்குரிய லா ச ர அவர்கள் குற்றால அருவியின் ரூபத்தை பெண்ணாக பாவித்து, பரவச நிலையை, படிப்பவரும் சேர்த்து அனுபவிக்கும் வகையில் வார்த்தைகளின் கோர்வையில் வடித்திருப்பார் அன்று கலங்கின க்ண்கள் இன்றும் எனக்கும் நீருக்கும் அது எந்த ரூபத்திலிருப்பினும் ஒரு பரவச உண்ர்வுண்டக்கி விடும். ‘ இந்த ஏதோ ஓர் நுரைக்கும் நீர்ப்பெருக்கில் நான் அடித்துச் செல்லப்பட விரும்புகிறேன்.’

    ReplyDelete
  2. //தண் எனும் ஒரு பெரும் தீ பற்றி எரிவதாக அருவி தழலுற்று நெளிந்தது. கும்பிடத் தோன்றியது.//
    //அருவியில் குளிக்க முடியவில்லை. அதைப் பற்றிப் பரவாயில்லை. இப்படி ஒரு விஸ்வரூபத்தில் அருவியைப் பார்க்க முடிந்ததே. அதுவே போதும்”.//
    அண்ணா நீங்கள் ஆனையைத் தவிர்த்து விட்டு மண்புழுவைப் பார்த்தவர் ஆயிற்றே....

    ReplyDelete