Friday 2 August 2013

எனக்கு மட்டும்.







நேற்றுக் காலை அது.
வழக்கமாக அந்த அடுக்ககத்தின் முன் மஞ்சள் நிற பள்ளி வாகனத்திற்காக இரண்டு மூன்று சீருடைப் பிள்ளைகள் காத்திருப்பார்கள். நான் கொஞ்சம் சீக்கிரமாக என் நாளைத் துவங்கியிருந்தேன். அந்தப் பிள்ளைகள் அவசரம் அவசரமாகச் சாப்பிட்டுக்கொண்டும் , காலணிகளுக்கு முடிச்சிட்டுக் கொண்டும், ப்ளக் ப்ளக் என்று குமிழியிட்டுக் கீழிறங்கும் தண்ணீரைப் பள்ளி நேர உபயோகத்திற்கு நிரப்பிக் கொண்டும் இருக்கலாம். தாத்தா ஒருவர் அவர்களில் யார்க்கேனும் உண்டெனில், பூப் பறிக்கிற கூடையில் நெட்டி முறித்துத் தோற்றம் மாற்றிப் புரளும் செம்பருத்தி பார்த்த ஒருமையுடன் ஆழ்ந்த கனிவு கசிய, புறப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு குழந்தையின் தலையை வருடி விடலாம். நான் அதற்கு முந்திய காட்சிகளின் அரங்கேற்றத்துடன் சம்பந்தப்பட்டிருந்தேன்.

அடுக்கக வெளிச்சுவருக்கு உள்ப் பக்கம் முந்திய இரவின் இருட்டு விலகாத முகத்துடன் , ஒரு இரவுக்காவலரின் அடிப்படைச் சாயல்கள் வரையப்பட்டவராக அந்த மனிதர் நின்று, சுற்றுச் சுவரில் கையூன்றி வெளிப்பக்கம் பார்த்துக்கொண்டு இருந்தார். எஸ்.ட்டி.சி. சாலையில் இந்த நாளின் புகையுடன் அதிகம் வாகனச் சக்கரங்கள் உருள ஆரம்பித்திருக்கவில்லை. ஒருவகையில் சாலை முற்றிலும் திறந்துகிடந்தது.

எதிர்ப்பக்கச் சிறகில், ஏ.ட்டி.எம் கண்ணாடிக் கதவுக்கு வெளியே ப்ளாஸ்டிக் நாற்காலியிட்டு உட்கார்ந்திருப்பவர், இந்த தினத்தின் முதல் வாடிக்கையாளரின் கைத் தள்ளலில் பதிவாகப் போகும் ரேகைகளின் வினோதச் சுழிப்பை ஊகித்தபடி புகைத்துக்கொண்டிருந்தார். அவருடைய பார்வையும் எதிர்ப்பக்கம் குவிந்துகிடந்தது.

ஒரு பத்துப் பன்னிரண்டு புறாக்கள், கருப்பு, பழுப்பு, வெள்ளை என எல்லா நிறத்திலும் சாலையோரத்தில் குனிந்து,நகர்ந்து தானியம் கொத்திக் கொண்டிருந்தன. வானத்தில் பறத்தலின் போது ஒரு வகை வடிவத்திலும், தரையில் தானியம் பொறுக்கையில் வேறொரு வடிவத்திலும் தன் கூட்டமான நகர்வை பறவைகள் கலைத்து அடுக்குகிற நேர்த்தி அபாரமானது. பிரதி செய்ய முடியாத அசல் சித்திரங்களை அவை வரைந்து வரைந்து மாயத்தின் கண்காட்சிக்கு வைக்கின்றன.

பக்கத்து உணவு தானியக் கிட்டங்கிக்கு வந்த லாரிகள் ஒன்றிலிருந்து சிந்திய தானியமாக இருக்கலாம். அல்லது அடுத்த திருப்பத்து ரேஷன் கடையில் இருந்து வாங்கி சைக்கிளில் கட்டிக்கொண்டுவந்த அரிசி மணிகளாகவும் இருக்கக் கூடும். எதுவெனினும் அது பறவைக்குகந்த தானியங்கள். அதன் அலகு நுனிகளுக்கு வாகாக அவை விளைந்து கிடந்தவை.

நான் புறா பார்த்தது அல்ல எனக்கு அந்தப் புறாக்களை முக்கியமானவை ஆக்கியது. எந்த அசைவும் இன்றி, எதிர் எதிர் பக்கங்களில் இருந்து அந்தப் புறாக்களின் தானியம் கொத்தலை, ஒரு உறைந்த மௌனத்தின் பாறையில் அமர்ந்து அலைகடல் பார்ப்பது போல, பார்த்துக்கொண்டிருந்த அந்த இரண்டு முதிர்ந்த மனிதர்களின் அவதானம் எனக்கு முக்கியமானது. அவர்கள் இருவரும், இனிமேல் கிழிக்க அவர்களின் காலண்டரில் எதுவும் தேதியற்றது போல, நிறைந்து போனவராக நின்றனர். இதுவரை விழாத ஒரு வெயில் அவர்கள் மேல் விழுந்து அவர்களைப் பிரகாசமாக்கி இருந்தது.

நான் எத்தனை புறாக்கள் என்று எண்ணவில்லை. பறவைகளை எண்ண அவசியம் இல்லை.. எண்ண முடியாது. அவை தன் எண்ணிக்கைகளை மாற்றிக் கொண்டு நம்மிடம் ஒரு மாய விளையாட்டு நிகழ்த்தும். எல்லாப் பறவைகளும் சேர்ந்து ஒரே ஒரு பறவையாகிவிட்டது போல ஒருகணம் அத்தனை சிறகுகளும் இரண்டே இரண்டு சிறகுகள் ஆகும்.

ஒரு உத்தேசத்திற்கு, அன்றைக்கு அங்கே பதினோரு புறாக்கள் தானியம் எடுத்தன எனில், அந்த அடுக்ககக் காவலரும், ஏ.ட்டி.எம் காவலரும் பனிரெண்டாம் பதிமூன்றாம் புறாக்கள் ஆகியிருந்தனர். முட்டையோடுகளுக்கு வெளியே இருந்து அவர்கள் அடைகாக்கப் பட்டிருந்தனர்.

பறவைகளின் எண்ணிக்கை உலகில் இப்படியும் கூடுவது எனக்கு மட்டும்தான் தெரியும்.
8

*

5 comments:

  1. இப்படியும் கூடுவது எனக்கு மட்டும்தான் தெரியும்.
    இப்படி அன்பும் கனிவும் நிறைந்த பார்வையால்
    மனிதர்களை , சக உயிர்களை பார்ப்பதும்
    உங்களுக்கு மட்டும்தான் தெரியும்

    ReplyDelete
  2. முதிர்ச்சி கலந்த பார்வைகள் பறவைகளுடன்
    எந்த விடியாக் காலையிலும்
    என்றும் வசந்தம் வீசும் எழுத்துக்கள்

    ReplyDelete
  3. எல்லாப் பறவைகளும் சேர்ந்து ஒரே ஒரு பறவையாகிவிட்டது போல ஒருகணம் அத்தனை சிறகுகளும் இரண்டே இரண்டு சிறகுகள் ஆகும்.

    ReplyDelete
  4. //மனிதர்கள் பறவைகள் ஆவது எளிது. அதிகப் பிரயாசைகள் கூட அவசியமில்லை. அவரவர் விலாவைத் தடவிப் பார்த்தால் போதும். //

    மனதனுக்கு மட்டும் மனம் வேண்டிய படி செல்லும் சிறகு அமைந்து விட்டால்!!!!????

    ReplyDelete
  5. "ஒரு உறைந்த மௌனத்தின் பாறையில் அமர்ந்து அலைகடல் பார்ப்பது போல, பார்த்துக்கொண்டிருந்த அந்த இரண்டு முதிர்ந்த மனிதர்களின் அவதானம் எனக்கு முக்கியமானது"

    - :) :)

    ReplyDelete