Thursday 10 January 2013

அவனாகவே







அந்த முகப்புத்தகப் படத்துடன் இந்த நாளைத் துவங்கினேன். அது சிபியா வண்ணத்தில் இருந்தது. கருப்பு வெள்ளை இல்லை என்றே நினைக்கிறேன். கருப்பு வெள்ளைப் புகைப் படங்கள் தன்னிடம் ஜீவனைத் தக்கவைக்கின்றன. சிபியா படங்களில் காலம் உறைந்துவிடுகிறது. ஒரு ஆஸ்டின் கார் பக்கத்தில் அதன் பட்டணப்பிரவேசநகர்வுடன் எங்கள் அம்மாத் தாத்தா இணைந்து நடந்து வரும் படம் ஒன்று அந்த நிறத்தில் உண்டு. ஆரியங்காவு கணவாயை செங்கோட்டை பாஸஞ்சர் தாண்டும் போது, குடைவரைப் பாறையில் கசிந்து வழியும் நீரைப் போல அந்தப் படத்தில் காலம் எங்கோ சுரந்து எங்கோ வழிந்து சென்றுகொண்டு இருக்கும்.
இந்த அதிகாலைப் படத்தில், காலத்தை உணரவில்லை. கூடுதலாக இருந்த ஏதோ ஒன்று எது எனச் சொல்லமுடியவில்லை. இதை எது இப்படி எழுதவைக்கிறதோ, அது அதில் இருந்த்து. நிச்சயம் நம் ஊர் இல்லை. வேறு பூகோளம். ஆனால் கீழை நிலம். இரு புறமும் நெல் கதிர் அல்லது புல் கதிர் அசையும் வயல். அந்தச் சிறுவன் கண்மூடி வாத்தியம் இசைத்தபடி நிற்கிறான். வயோலின் வாத்தியத்தை அவன் தோளில் சாய்த்து ஏந்தியிருக்கும் விதமும் வில்லை அதில் படரவிட்டிருக்கும் நேர்த்தியும் ஒரு பிரபஞ்ச இசைஞனுக்கு உரியது. கிழக்குப் பார்த்து நிற்கிறான் போல. சூரியனுக்கு வாசிக்கிறவனாக இருக்கிறான். அவன் நெஞ்சில், முன்னுடம்பில் அங்கங்கே இளம்வெயில். அதை விடப் பேரழகு அந்த வெயிலைப் போலவே அவனை அடைந்துவிட விரும்புகிற இரு பறவைகள். புறாக்களாக இருக்க வேண்டும். அசைவின் படபடப்பில் புகைப்பட க்ளிக்கில் சிறகடிப்பு மையம் தவறிச் சிதறியிருக்கிறது. சிறகுகளை வைத்தல்ல, அலகுகளை வைத்துப் பறவையைத் தீர்மானிக்கலாம் என , வெகுசில பறவைகளை மட்டும் அறிந்த நான் நினைத்துக் கொள்கிறேன். வெகு சிலவற்றின் மூலமே வெகு பலவற்றை அடையவேண்டியதிருக்கிறது. அந்த அலகைப் பார்த்தால், புறாக்கள் என்ற சாயல். நமக்குப் பிடித்த சாயல்களைத் தான் முதலில் காண்கிறோம். சற்றுக் கழித்து அதன் அசல் சாயல் தெரியவரும்.. அதையும் தாண்டிவிட்டால், அ-சாயல். நான் முன்பு எழுதியது ஞாபகம் வருகிறது.   அ-சாயலை அடைவதற்குத்தான் ஆகிவிடுகிறது இத்தனை காலம்’.
அந்தச் சிறுவன் அணிந்திருக்கும் ‘முக்கால்இன்னும் நம் வயலோரச் சிறுவர்களை இன்னும் அடைந்துவிடவில்லை. ‘நைட்டிஎனப்படும் தளர்வாடை நீக்கமற நடத்தியிருக்கும் ஊடுருவலை இந்த ‘பெருமூடாஸ்கால் சட்டைகள் விரைவில் நிகழ்த்திவிடும். சந்தேகமே இல்லை.  வாரச் சந்தைகளில் விற்கப்படுவதற்கான இந்த வகை பழைய உடைகளை  பழந்துணி வியாபாரிகள் பெரு நகரங்களின் அடுக்குமாடிக்குடியிருப்புகளில்  சேகரித்துக்கொண்டு இருக்கிறார்கள், ஏற்கனவே.
நான் அந்த வயல்வெளியாக இருக்க நினைப்பது பேராசை. இருபக்கம் அசையும் கதிர்களில் ஒன்றாக, அல்லதொரு கதிர்மணியாக வேனும் இருக்க அனுமதிக்கப் படலாம். அதை விடவும் எனக்கு ஆசையுற அனுமதி உண்டெனில் அந்தப் பறவைகளில் ஒன்றாக. அந்த வயோலின் வாத்தியமாக இருக்க விழைந்து நான் பிரபஞ்ச கானத்தை அவமதிக்க விரும்பமாட்டேன். இருக்கலாம். அது என் கூடுதலான பெரு விருப்பாக்க் கூட இருக்கலாம். ஆனால், என்ன? நான் சூரியனுக்கு வாசிக்கும் அந்த மெய்மறந்த சிறுவனாக இருக்க விரும்புகிறேன்.
இக்கணம் அவனாகவே இருக்கிறேன்.
என் மீது படரும் வெயிலாக இருப்பதா, என்னை நோக்கிப் பறந்து வரும் பறவைகளாக இருப்பதா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்கவேண்டும்.
%






6 comments:

  1. என்ன ஒரு விசாலமான ஆழமான அன்பு நிறைந்த பார்வை , உங்களின் பார்வை

    ReplyDelete
  2. வயலின் இசைக்கு நடனமிடும் பறவை போல உங்கள் வரிகள் என்னைச் சிந்தனை வெளியில் பறக்க வைத்தன.

    ReplyDelete
  3. ரம்மியமான வரிகள்.....தாள லயம் மிகுந்த வார்த்தைகள்!.. வாசிக்கிறபோதே, வயலின்கள் கண்களில் நுழைந்துவிடுகின்றன...எதை வாசிக்கிறபோதே?... வயலினையா?? உரைச்சித்திரத்தையா?...தீர்மானமாகச் சொல்வது அவ்வளவு எளிதா என்ன?!

    ReplyDelete
  4. வணக்கம் ◌ாரியவரே!தங்கள்தளம் இன் று தான் பார்க்கக்கிடைத்தது.ஆனால் உங்கள்எழுத்துகளில் சில மட்டும் நண்பனின் முகறநுல் வழி படித்ததுண்டு.இது நான் மிகவே லயித்து போன பதிவு.பாராட்டுக்கள் ஐயா!

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா!இன்று இத்தளம் காணகிடைத்தமை பாக்கியமே!ஆகா... என்ன ஒரு பதிவு.அப்படியேலயித்து விட்டேன்.பெயரளவில் மட்டுமே அறிந்திருந்த உங்னளை இன்றுசந்தித்தமை பெரு மகிழ்வு.

    ReplyDelete