Thursday 31 May 2012

இந்தப் பனிக் காட்டில்...


அதற்குப் பின்னால்
------------------


ஒரு முதிர்ந்த யானை போல
இந்தப் பனிக்காட்டில்
மூங்கில்புதரின் திசையில் நடக்கிறேன்.
தும்பிக்கைக்கு மட்டும் வயது குறைந்து
உல்லாசமாகத் துளாவுகிறது வழிச் செடிகளை.
பாறையொன்றுக்கு ஆரம் சூட்டுகிறது
காற்றைச் சுழற்றி.
கலவிக்குப் பிந்திய
காதல்மடப்பிடியின் மணம்
அகாலம் தாண்டி எழுகிறது
பெருமழைத் தாரை கருவரியிட்ட
கல்தொடர்ச்சியில்.
நான் குதிக்கவிருக்கும் பேரருவி விழுவது
அதற்குப் பின்னுள்ள
ஆழங்காணாப் பள்ளத்தில் தான்.


கஸல்
------

நான் இப்போது
ஒரு கஸல் பாடிக் கொண்டிருக்கிறேன்.
குரல் ஹரிஹரனுடையது.
வரிகள் அப்துல் ரகுமானுடையது.
கண்ணீர்மட்டும் என்னுடையது.


இது போன்ற
---------------------


எந்தக் குப்பையைப் புறம் தள்ளும்போதோ
ஏறிய சிலாம்பு குடைகிறது.
வலது சுட்டு விரலில் வாதை.
எருக்கம் பால் வைத்துக்கொண்டே
இவள் சொன்னாள்,
‘கல்லடி பட்டால் காய்த்த மரம்.
காயம் பட்டால் ஏறுமுகம்.
கருப்பு வண்ணத்துப் பூச்சி
அமர்ந்து பறக்கும்
ஒரு கருநீலப் பூங்கொத்து
காற்றிலும் அசையாது கேட்கவிரும்புவது
இது போன்ற எளிய சொற்களைத்தான்.


அப்படியொன்றும்
---------------------------- 

இதே பகுதியின்
மூன்றாம் குறுக்குத் தெருவில்
என் சினேகிதியின் முதிய பாட்டியை
கண்ணாடிப் பெட்டிக்கு வெளியே
நீண்டுகிடக்கும் ஆணிவேர்களுடன்
அசையா விழுதுகளுடன்
பார்த்து நின்றாயிற்று.
இந்த அடுக்கக இரண்டாம் தளத்தின்
தெற்குப் பார்த்த வீட்டில்
மூன்றே நாட்களின் வெயிலுக்குக்
கூசிய கண்களுடன்
மடி நிறைப்பது, உறவினருடைய
மகள் வயிற்றுப் பேரன்.
அப்படியொன்றும் அதிகமில்லை
இறப்புக்கும் பிறப்புக்கும்
இடைப்பட்ட தூரம்.

%

கல்யாண்ஜி
உயிர் எழுத்து - மார்ச்.2012.

Wednesday 30 May 2012

சில வருடங்களுக்குப் பிறகு.


ஏற்கனவே அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறேன்.
பரமன் தான் அழகர்சாமியின் குதிரையையும் மௌன குருவையும் வாங்கிக் கொடுத்தான். அவனிடம் சொல்லிவிட்டால் போதும். புலிப்
பாலைக் கூடச் சாயந்திரத்துக்குள் கொண்டுவந்து கொடுத்துவிடுவான்.
சொல்ல முடியாது.  ஐயப்பனைக் கூட, அவனுடன் ஆட்டோவில் ‘ஒண்ணுபோல’ ஏற்றிக்கொண்டு வந்து நம் வீட்டில் இறங்கி, ‘என்ன கல்யாணி, யாரு வந்திருக்கா, பாத்தீங்களா?’ என்று கேட்பான்.

மௌனகுருவை எனக்குப் பிடித்திருந்தது. வீட்டில் நாலைந்து பேரோடு,
அவ்வப்போதின் கவன விலகல்களோடு பார்த்தபோதும், அது என்னை
ஏதோ சிலவகைகளில் தொந்தரவு செய்துகொண்டிருந்தது.  அந்தப்
படத்தின் பல பேருடன் வாழ்வது போலவும் வாழவேண்டும் போலவும்
இருந்தது.

ஒரு மூன்று நாட்களுக்குள் என்னென்னவோ நடந்துவிடுகிறது . மூன்று நாட்கள் அதிகம். மூன்று நொடிகளில் மனம் தடம் புரள்கிறதற்கான
எல்லாச் சாத்தியங்களுடன்தான் சமீபத்திய நாட்கள் இருக்கின்றன.  உங்கள் கையில் ஒரு கழச்சிக்கல்லைப் பொத்திவைத்திருந்தால் எப்படி, உள்ளே
ஏதோ ஒன்று இருப்பதை உணர்வீர்களோ அதே போல, என் விலா எலும்புகளுக்குள் இருதயத்தின் இருப்பைப் பௌதிகமாகக் கனத்து உணர
முடிகிறவனாக இருந்தேன்.

என்னை நானே என்னிடமிருந்து வெளியேற்றிக் கொள்ளவேண்டும்.  இது பெரிய சிரமம்.    உலகத்திலேயே அதிகம் சுலபமற்றது,   நமக்குள் நாம்
நுழைவதும், நம்மிடமிருந்து நாம் வெளியேறுவதும்தான். அதுவும் சலனம்
எதுவும் இன்றி. இன்னும் எனக்கு அற்புதமாகப் படுவது, ஒரு பறவை தன்
சிறகை விரிப்பதும், பறத்தல் முடிந்து கிளையமர்கையில் தன் சிறகை
ஒடுக்குவதும். நான் அந்த விரித்தலுக்காகவும் ஒடுங்குதலுக்காகவுமான
பயில்தலை நோற்கிறேன்.

இசை கேட்கலாம். இந்தச் சுவர்களுக்கு மத்தியில் சேர்ந்திசை போல அந்தந்த நேரத்து ஆனந்தமோ துக்கமோ வாசிக்கிற அமைதியைக் கூடக் கேட்கலாம்.  எப்போதாவது அப்படியெல்லாம் அமைதியை இசையாகக் கேட்டதும் உண்டு.   முக்கியமாக என்னுடைய சென்னை தினங்களில். இப்போது முடியாது. இந்த மனநிலை அதற்கு ஒத்துவராது.  இடிபாடுகளுக்கு இடையே இருந்துகொண்டு கடைசிச் செங்கலை உருவுவது அது.
எனக்குக் கொஞ்சம் நெருக்கமான அசைவு, நெருக்கமான சத்தம், நெருக்க
மிகு மனிதர்கள் வேண்டியது இருந்தது. நான் அந்தப் பின்னிரவில் எந்தத்
தயக்கமும் இன்றி, ‘மௌன குரு’வைத் தேர்ந்து கொண்டேன்.

மௌனகுரு திரைப்படத்தின் இயக்குநர் பெயரை இப்போது கூட எனக்கு நினைவில்லை. ஆனால் கருணாகரன் எனும், பழனியம்மாள் எனும், ஆர்த்தி எனும், ராஜேந்திரன்,செல்வம், பெருமாள் எனும் பெயர்கள் ஞாபகம் இருக்கின்றன. படத்தில் பெயர் அற்றவர்களாக வருகிற கருணாகரனின்
அம்மாவும், அந்த ‘ஃபாதர்’ என அழைக்கப் படும் கல்லூரி முதல்வரும்
ஞாபகம் இருக்கிறார்கள்.
இதுவரை பழனியம்மா என்று எந்தத் தமிழ்ப்படப் பெண்ணிற்காவது பெயரிட்டிருப்பதை நாம் இதற்கு முன் அறிந்திருக்கிறோமா?  அதுவும்
காவல் துறையில் ஆய்வாளர் என்கிற இடைநிலை அதிகாரியாக?
சூலுற்ற வயிற்றோடு நடமாடுகிறவராக.    ஏற்கனவே ‘அன்பே சிவம்’ படத்தில் ஒரு தோழராகக் கண்ட உமா ரியாஸ்கானை மீண்டும் இந்தப் பழனியம்மாவாக காண நிறைவாக இருந்தது.  மகப்பேற்றால் அடிவயிறு
இறங்கின ஒரு நடையில், ஒரு சூலியின் முகச் சோர்வில், ஒரு கணினித் திரையை உற்றுப் பார்க்கிறதில், ஒரு கூரியரை வாசிக்கிறதில், மருத்துவ சோதனைக்குக் காத்திருக்கும் நேரத்தில் அலுவலகரீதியாக வரும் தொலைபேச்சை முடித்துவிட்டு ஜன்னல் சட்டம் வழி வெளியே பார்க்கையில்,  கல்லூரி முதல்வர் தன் மகனைப் பற்றி வெளிப்படுத்தி
உடைந்து குலுங்கும்போது  அவரைக் கனிவுடன் எதிர்கொள்கையில், கடைசிக் காட்சியில் கருணாகரனிடம் தன் கைகளில் எதுவும் இல்லை
என்பதை கனத்த வெளிப்படைக் குரலில் நிதானமாகச் சொல்கையில்
எல்லாம், அவர் உமா ரியாஸ் அல்ல, பழனியம்மா மட்டுமே.

கருணாவின் அம்மா பாத்திரத்திற்கென்ன? ஒரு இடத்தில் கூட, துரும்பு
அளவு  இங்கங்கு விலகி, ஒரு தமிழ்த் திரைப்படத்தின் இதுவரையிலான
அம்மாவாகிவிடாத, அசல் அம்மா அல்லவா அது.   அதனுடய குரலும்
சொல்லும் பேச்சும் பாவனையும் சாதாரணமானது அல்ல. ஒரு காட்சியில்
கருணாவும் ஆர்த்தியும் தோள்சாய்ந்து நிற்பதைப் பார்த்துவிட்டு அவர்
அந்தப் பெண் போகிற வரை காத்திருந்து, தன் மகனைக் கோபமாக
அறைகிறார். வளர்த்தியான மகனும், குட்டையான தாயும் உலகத்தில் இல்லாதவர்களா?   கன்னத்தில் அல்ல, மகனின் நெஞ்சில் சப்புச் சப்பென்று
அறைகிறாள். . மேலும் நான்கு வார்த்தை பேசுகிறாள்.   மேலும் நெஞ்சில்
அறைகிறாள்.  ஹ, என்ன காட்சி அது.

வாகை சூடவா படத்திலேயே இனியாவின் கண்களில் எவ்வளவோ இருந்தன.  வாசிக்கத் தந்துகொண்டே இருக்கும் படியான கண்கள் இதற்கு முன்பு ஸ்ரீவிதயாவுக்கு உண்டு. இப்போது இந்தப் பெண்ணுக்கு.    மிகச் சிறிய பாத்திரத்தைச் சரியாகச் சுமப்பதுதான்,   ஒரு நடிகனின் முன் வைக்கப் படும் மிகக் கூர்மையான சவாலாக இருக்கும்.    இனியா தொடர்ந்து வெல்வதற்குச் சாத்தியமான நிறைய இடங்களை இயக்குநர்
தர, முழுமையாக அந்தப் பெண் அவற்றை நிரப்பியிருக்கிறது.

அந்த ‘ஃபாதர்” எனப்படும் பிரின்சிபால் முகத்தை, எந்தக் கிறிஸ்துவக் கல்லூரியில் படித்த, விடுதியில் இருந்த யாரும் உடனடியாகத் தன்
ஞாபகங்களின் வியர்வையோடு உணரமுடியும். அச்சு அசலான முகம். ஒரு உண்மையின் துயரத்துடன், துயரத்த்தின் உண்மையுடன் பரிசுத்தமாக
வாழ விரும்புகிற அந்த முகம் எனக்கு என்னுடைய ஜான் ஸாரை நினைவு படுத்துகிறது. ஜான் ஸார் அற்புதமான என் ஆறாம் வகுப்பு ஆசிரியர். மிகக் கனத்த கண்ணாடி அணிந்திருப்பார். ஆங்கிலமும் கணக்கும்
அவர் போட்ட பிச்சை. அவருக்கு தியோடர் என்று இப்படியொரு மகன்,
கெட்ட குமாரன் உண்டு.  ஜான் ஸார் அதிக நாட்கள் ஒரு பிஸ்கட் கலர்
புஷ் கோட் போட்டிருப்பார். மீசை கிடையாது. இந்த அங்கியணிந்த, வீட்டில கை வைத்த பனியன் அணிகிற, மீசை வைத்த, அக்கறையுள்ள பிரின்சிபால்
நிச்சயம் ஜான் ஸாரின் இன்னொரு பதிப்புத்தான்.  மனிதரின் வகைமாதிரி
என்று பார்க்கப் போனால், இப்படித் திரும்பத் திரும்பப் பதிப்பிக்க வேண்டிய அளவுக்குக் கம்மிதான் போல.

இவ்வளவு பேரைப் பற்றி சொல்கிறவனுக்கு கருணாகரனைப் பற்றிச் சொல்ல எவ்வளவு இருக்கும். எவ்வளவோ இருப்பதைப் பற்றி நம்மால்
எப்போதுமே குறைவாகத்தான் சொல்லமுடிகிறது. அல்லது நாம் சொல்வதே இல்லை.
அதிக பட்ச உண்மை. அதிக பட்ச நேர்மை என்பதே எனக்கு நானே
இதுவரை வரித்துக்கொண்ட என் வாழ்வின் அறமாக இருக்கிறது. இந்த
‘மௌன குரு’வை மீண்டும் பார்க்க அவசியம் நேர்ந்த ஒரு அலைக்கழிப்பு நிறைந்த தருணம் கூட, என் அந்த நேர்மையும் உண்மையும் மிகவும் மோசமாகச் சந்தேகிக்கப்பட்ட ஒரு நாளின் காயம் நிறைந்த,  சற்றும் வலிகுறையாப்   பின்னிரவில்தான்.
என்னால் முழுமையாக, கருணாகரனை, கருணாகரனைப் போன்றவர்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. என்னுடைய ஒரு சிறிய அம்சம் அவரிடமோ, அவருடைய ஒரு சிறிய அம்சம் என்னிடமோ இருக்கிறது.

‘சில வருடங்களுக்குப் பிறகு’ என்ற அந்த வாசகம் ஒருவேளை எனக்கும்
தேவைப் படலாம்.   எனக்குத் தண்டனை முடிந்திருக்கும்.    மன நலக் காப்பகத்திலிருந்து நான் திரும்பியிருப்பேன்.  அப்போது கருணாகரனைப் போல, மிகச் சந்தோஷமாக, சைகைகள் மொழியில் நான் கற்றுக் கொடுத்துக் கொண்டிருபேன்.
என் சைகைகளைப் புரிந்து கொள்கிறவர்கள் மட்டும் என் எதிரிலும்,
என்னுடனும் இருப்பார்கள்.



Sunday 27 May 2012

உள் ஆறுகள்.


பாலருவி ஆரியங்காவு வனச்சரகத்தில் இருக்கிறது.
முந்திய நாள்வரை அருவியில் தண்ணீர் இல்லையாம். அன்றைய எங்கள்
தினம் நீரால் ஆசீர்வதிக்கப் பட்டிருந்தது. வாகனத்திற்கும் பயணிகளுக்கும்
சுங்கத் தீர்வை, அனுமதிக் கட்டணம் உண்டு. செலுத்தினால்தான் மேற்
கொண்டு செல்ல முடியும்.

காத்திருந்த சமயத்தில் விற்பனைக்கு வந்த அந்தப் பெண் மாங்காய்க் கீற்றுகளுடன் வேறொன்றையும் சிறு தட்டில் ஏந்திக்கொண்டிருந்தாள். கருத்த பெண். மினுமினுக்கும் அந்தக் கருப்புக்கு வேறு உதாரணங்கள் இல்லை. அப்படியொரு பல் வரிசை. சுடரும் கண்கள். பதினெட்டு அல்ல. இருபது அல்ல.முப்பத்தைந்து இருக்கலாம். இந்த வாழ்வின் துக்கத்தை, சந்தோஷத்தை, ஆணை, குழந்தைகளை அறிந்திருந்த முழுமை.

காகிதக் கப்புகளில் வைத்திருந்ததை ‘பன்னீர் கொய்யா’ என்றாள். அது
கொய்யாவை விட்டு வெகு தூரத்தில் இருந்தது.  பழ வடிவு கிடையாது.
பூ வடிவில் இருந்தது. ஒரு மலைபடு பூவாகக் கூட இருக்கலாம் அது.
மஞ்சளும் ஆரஞ்சுமாக நிறத்தில் ஒரு பழுக்கிற தக்காளியை ஞாபகப் படுத்தியது.

இரண்டு பேர்களிடம் துவக்கிய வியாபாரத்தில், நான் வாங்கத் தயாராகி விட்டேன் என்பதை அந்தப் பெண்ணால் படித்துவிட முடிந்தது. ‘வாங்கிக்
கொள்ளுங்கள். ருசியாக இருக்கும்’ - என்னிடம் நியாயப் படுத்தினாள்.
வாங்குவதா வேண்டாமா என்ற தயக்கத்தின்  புள்ளியை நான் அடைந்து
விடும் முன் என்னுடைய கையில் அதைச் சேர்த்துவிடும் நேரத்தை ஒரு
சிரிப்புடன் அந்தப் பெண் அறிந்திருந்தாள்.

வாங்கிக் கொண்டேன். வியாபாரம் நவீனமடைந்து, ஒரு காகிதக் கப்பில்
அவை அடுக்கப்பட்டிருந்த விதம் எனக்குப் பிடித்திருந்தது. தின்றுபார்த்தால்
அடிப்படையில் அரி நெல்லிக்காய் ருசியுடன் துவங்கி,    அப்புறம் எந்த
ருசியும் அற்றுப் போனது.
ருசியற்ற இடத்தை அடைந்ததுதான் ருசியைவிட எனக்குப் பிடித்திருந்தது.

%

முரப்ப நாடு வல்ல நாட்டுக்கு முந்திய கிராமம்.
சிவகாமசுந்தரி சமேத கைலாச நாதர் கோவில் ஆற்றின் கரையில் இருந்தது. நாங்கள் கோவில் துறையில் குளிக்கவில்லை. அதைவிட்டு விலகி இன்னொரு துறை இருந்தது. சிந்து பூந்துறையும், குறுக்குத் துறையும், முன்னடித் துறையும், கருப்பந்துறையும் மணலற்றுப் போக,
தாமிரபரணி இங்கே மணல் உள்ள ஆறாக ஓடிக்கொண்டு இருந்தது.  நல்ல
‘இழுப்பு’ தண்ணீரில். ஆனால் இடுப்பளவு இருந்தால் அதிகம்.  மீன் கடித்தது.
குனிந்து மணல் அள்ளினால் சிப்பி  கிடைத்தது. கூழாங்கல் கிடைத்தது.  ஆகாயத் தாமரை ஒன்றிரண்டாக தண்ணீர் ஓட்டத்தில் நம்மைத் தாண்டி
பச்சை அகலாய் நகர்ந்து போனது.

ஓடுகிற தண்ணீர் காலத்தைத் தொலைக்கிறது. வயதை அழிக்கிறது. கவலை
எதுவும் உண்டெனில் அதைக் கழற்றிக் கரையில் வைத்துவிடுகிறது.  நீரில்
சிரிக்க மட்டுமே முடியும். எல்லோரிடமும் மகிழ்ச்சியின் ஈரம் மட்டுமே. எல்லோருடைய கண்களும் சிவந்து, ஒரே ஒருவருடைய கண்களாகி.

குளித்து முடித்து, ஒரு வேப்பமரத்தடியில் உட்கார்ந்து சாப்பிட்டோம். அந்தப் பாட்டி வந்தாள். பாட்டி என்பது நன்றாக இல்லை.  ‘என்னமோ’ மாதிரி இருக்கிறது. ஆச்சி வந்தாள். அதுதான் சரி.  ஆச்சிக்கு பசலிக்கொடி
மாதிரி உடம்பு. மருந்துக்குக் கூடப் பல் இல்லை. ( மருந்துக்கு எதற்குப்
பல்? விருந்துக்குத் தானே வேண்டும்.).  பொக்கை வாய்க்கு ஒரு அழகு வந்துவிடுகிறது. பள்ளத்தாக்குக்கு ஒரு அழகு. காலியாகக் கிடக்கும்
மத்தியானத் தெருவுக்கு ஒரு அழகு.  எண்ணெய் தேய்த்துக் குளிக்கத் தோடு மூக்குத்தி கழற்றிய முகத்துக்கு ஒரு அழகு. இப்படியாக இதுவும்.
வயது எழுபதுக்கு மேல் எதுவுமாக இருக்கலாம். மைல்கல் இல்லாவிடில்
ஊர்போய்ச் சேர முடியாதா என்ன?

ஒரு கம்பை ஊன்றியபடி விரைப்பாக வந்தாள். கூனல்கிடையாது. ஆச்சிக்கு
முன்னால் ஆச்சி சிரிப்பு வந்தது.
‘ஆச்சி, இட்லி தரட்டுமா? எங்க கூட இருந்து ரெண்டு சாப்பிடுதியா?’
‘சாப்பாடு ஆச்சுய்யா’ - இதுவும் சிரிப்போடுதான். ஆச்சி கை நீட்டிக் காசு எதுவும் கேட்கவில்லை.    நான் கொடுத்தால் அது   நன்றாக   இருக்காது இல்லையா.  இரண்டரை வயது ஆதியிடம், ‘ஆச்சிகிட்ட கொடு’ என்றேன்.
ஆதி கொடுத்தான். சந்தோஷமாக வாங்கிக் கொண்டாள்.  எவ்வளவு காசு
அது, எட்டணாவா, ஒரு ரூபாயா, இரண்டா, ஐந்தா என்று எல்லாம் பார்த்துக்
கொள்ளவில்லை. ‘மகராசன்’ என்று ஆதியை முத்தினாள். எந்த ஊரிலிருந்து வந்திருக்கிறோம் எனக் கேட்டாள். ஆற்றில் ‘நல்லா’க் குளித்தீர்களா?  கோவிலுக்குப் போய் சாமி கும்பிட்டீர்களா?  என்று விசாரித்தாள். குனிந்து
அணிலோ வௌவாலோ கடித்துப் போட்டிருந்த மாம்பழத்தை எடுத்துக்
கொண்டாள்.  ‘வீட்டுக்குப் போ(கு)ம் போது ஒரு குடத்துல ஆத்(து)த்தண்ணி
எடுத்துகிட்டுப் போங்க. கைலாச நாதரு தீர்த்தம்’ லா அது’ என்று அதற்கும்
சிரித்தாள். சிவகாமசுந்தரிச் சிரிப்பு.

இது எல்லாம் பெரிதில்லை.  அவள் அடுத்துச் சொன்னதுதான் முக்கியம்.
‘எல்லாரும் ஏ(ன்) வீட்டுக்கு வந்துட்டு, வெயில் தாழப் போ(க)லாம் ‘லா’
சிரிக்காமல் இதையும் அவளால் சொல்லமுடியவில்லை. சிரிப்பு இல்லை. ஆனந்தம்.   வெயில் மாதிரி, நாங்கள் உட்கார்ந்திருந்த வேப்பமர நிழல் மாதிரி, ஆச்சியின் சிரிப்பு எல்லோர் மேலும் பிரகாசமாக, குளுமையாக
விழுந்தது.
நாங்கள் பதிலே சொல்லவில்லை.  சொல்ல முடியவில்லை.  உலகத்தில்
எல்லாவற்றிற்கும் பதில் சொல்லவேண்டும் என்று கட்டாயமா என்ன?

%

முக்கூடல் ஆறு அத்தனை தெளிவாக இருந்தது.
பளிங்கு மாதிரித் தண்ணீர். கடுகையோ மிளகையோ போட்டால், விழுந்த இடத்தில் அப்படியே மணலோடு அள்ளிவிடலாம்.  அப்படி ஒரு  சுத்தம்.

ஓடுகிற ஆற்றில் மணலை அள்ளிப் பார்க்க வேண்டும்.      அது   ஒரு அனுபவம். முதலில் ஒரு குத்துத் தண்ணீரை அள்ளுகிற மாதிரி இருக்கும். அப்புறம் ஒரு குத்து மணலை அள்ளின மாதிரி இருக்கும். பின்பு யார் யாரின் அஸ்தியையோ ஒரு குத்து அள்ளின மாதிரி. ஒரு குத்து காலத்தை
அள்ளிய மாதிரி உற்றுப் பார்த்தால் உள்ளங் கையில் அகாலத்தின் பொன் மினுங்கும்.  கைப்பிடியில் மணல்கடிகை ஒழுகிக் காலம்அளக்கும. மணலை
அள்ளுவதற்கே கை. கையால் அள்ளப்படுவதற்கே மணல் என்பதே கணக்கு
அல்லது கணக்கின்மை.

இரண்டு மூன்று பேரிடம் கேட்டுவிட்டோம். முக்கூடல் (திரிவேணிசங்கமம்
என்பதற்கு எவ்வளவு அழகிய தமிழ்) என்றால் என்னென்ன ஆறுகள்? முதல்
ஆறு தாமிர பரணி. இரண்டாம் மூன்றாம் ஆறுகள் எவை?      யாருக்கும் தெரியவில்லை. தெரியவில்லை என்று சொல்லமாட்டார்கள் அல்லவா.
சிரித்தார்கள். ஆறும் நீரும் சிரிக்கச் சொல்லும்.    ஆற்றங்கரைச்    சிரிப்பு
ஆற்றங்கரை நாணல் மாதிரி, தாழை மாதிரி.

கரையோரம்தான் கோவில். முத்துமாலை அம்மன் கோவில்.  அப்புறம் போகாவிட்டால் எப்படி?  முத்துமாலை அம்மன் அழகாக இருந்தாள்.  பொதுவாக நான் பார்த்த எல்லா அம்மன்களுமே இப்படி நன்றாகத்தான் இருக்கிறார்கள். உயரமாக, தீர்க்கமாக, வாட்ட சாட்டமாக, நேரில் நிற்கிற மாதிரி. 
கோவில் என்றால் பக்கத்தில் இரண்டு கடை இல்லாமலா? ஒரு கடை இருந்தது.‘டீ கிடைக்குமா?’ என்று கேட்டோம்.
’இருக்கு’ என்று சிரித்தார். ஒடுங்கிய ‘சித்துப் போல’ முகம். நரைத்த தலை. நரைத்த மீசை. நரைத்த சிரிப்பு. எல்லாம் பஞ்சு மாதிரி.    டவுண்காரர்களின் சந்தேகம் நம்மை விட்டுப் போகுமா?
‘தம் டீயா தாத்தா?’
தாத்தா சிரிப்பு மாறாமல் இடப்பக்கம் கையைக் காட்டினார்.  ப்ரூ கலவை
இயந்திரம். காஃபி சதுரம் தனி. தேனீர் சதுரம் தனியாக. ‘எவ்வளவு?’ என்று
நாங்கள் கேட்போம் என்று நினைத்திருப்பார் போல.  ‘ரெண்டும் ஆறாறு
ரூவா; என்றார். அப்படிச் சொல்லும் போதே என் கையில் ஏந்தியிருந்த
ஆதியின் கன்னத்தை லேசாகத் தடவினார். முதலில் இரண்டு பேர் குடித்து
‘டேஸ்ட்’ பார்த்தோம். நன்றாக இருக்கிறது என்று மேலும் மூன்று பேர்
குடித்தார்கள்.  அவர்களுக்கும் பிடித்துப் போகவே, தூரத்தில் மரத்தடியில்
நின்ற பெண்கள் இருவரை வரச் சொல்லிக் குடிக்கச் சொன்னோம்.
மொத்தமாகச் சொன்னால் என்ன என்று அவர் அலுத்துக்கொள்ளவில்லை.
‘கணக்கு ஒழம்பீராம’ என முணுமுணுக்கவில்லை. சிரித்துக் கொண்டே
ஒவ்வொரு கப்பாக ஊற்றிக் கொடுத்தார். ஒரு துணியால் அவ்வப்போது
சிந்திய துளிகளைத் துடைத்தார். ‘சூடா இருக்கா? ஆத்திக் கொடுக்கவா?’
என்று அர்ச்சனாவைப் பார்த்துக் கேட்டார்.   ‘ஒங்க பேத்தியா, முழுப்பரிட்ச
லீவுக்கு வந்திருக்காளா?’ என்ற கேள்வி என்னிடம்.

‘எவ்வளவு ஆச்சு?’ என்று கணக்கு முடிக்கும் போது எனக்கு அவரிடம்
கேட்கத் தோன்றியது. ‘இந்த முக்கூடல்னு சொல்லுதாங்களே. மூணு ஆறு
எதெல்லாம்?  ஒண்ணு தாமிரபரணி . மத்த ரெண்டு?’
அது புறப்பட்டு வருகிற திசைகள் எல்லாம் சொல்லி,   ‘ ரெண்டாவது கருணை ஆறு.  மூணாவது உள்ளாறு” என்றார்.
எனக்கு மூன்றாம் ஆற்றின் பெயர் பிடிபடவில்லை.  ‘மூணாவது ஆறு என்ன?’ மறுபடி கேட்டேன்.
‘உள். உள். உள்ளாறு. உள்ளே வெளியேண்ணு சொல்லுதோம்லா. அந்த உள். கண்ணுக்குத் தெரியாம உள்ளே ஓடுத ஆறு. எப்பவுமே கண்ணுக்குத் தெரியாம ஓடுத ஆறுதான் விஷேசம்’ அவர் சொல்லி முடித்தார்.  சிரிப்பு
இப்போதும் இருந்தது. கண்ணுக்குத் தெரியாத ஆறு மாதிரிச் சிரிப்பு அது.
‘வடக்கே கூட இப்படித்தான். கங்கே தெரியும். யமுனே தெரியும். மூணாவது ஆறு சரஸ்வதி கண்ணுக்குத் தெரிய மாட்டா. அவ உள்ளாறு,    உள்ளாறு
தான் எப்பவுமே விஷேசம்’  அவர் எங்களைப் பார்த்து அல்ல, முக்கூடல்
ஆற்றைப் பார்த்துச் சொல்லிக்கொண்டிருப்பது போல இருந்தது.

நாங்கள் புறப்படும் போது ஒரு அமைதி வந்துவிட்டிருந்தது. அதுவரை
தொங்கி அசைந்துநின்ற ஆலமரவிழுதுகள் எல்லாம் அங்கங்கே அசைவை
நிறுத்தி இந்தக் கடையைப் பார்த்துபோல இருந்தது.  அவரிடம் சொல்லிக் கொள்வது போல சிரித்தேன். அவர் பின்னால் திரும்பினார். கடையில் ஒரு
முருகன் படம் இருந்தது.  அதற்கு முன்பு ஒரு கொத்து மயில் பீலிகள். அதிலிருந்து ஒன்றை உருவி ஆதியின் கையில் கொடுத்தார். மறுபடியும்
கன்னம் தடவிச் சிரித்தார். ஆதி என்னிடம் காட்டிச் சிரித்தான்.

எனக்கு மறுபடியும் முங்கிக் குளிக்கிற மாதிரி இருந்தது.  அதுவும் அந்த
 கண்ணுக்குத் தெரியாத உள் ஆற்றில்.

Friday 25 May 2012

தொடரும் பிப்ரவரி...



முற்றிலும்
-----------------

பார்த்துக் கொண்டிருந்தது
இத்தனைக்கும்
பேருந்து நிழற்குடையில் நின்றவளின்
கனத்த மார்பை மட்டுமே.
காலுக்கருகில் நிற்கும் கருப்பு நாய்க்கு
மேலும் ஒதுங்க இடம் அனுமதித்து,
உலகு புரந்து ஊட்டத் திறந்திருந்தபடி,
கருகமணிப் பாசியணிந்த தோழியிடம்
தணிந்த குரலில் உரையாடிய அவள்
அறியவேயில்லை உறிஞ்சும் என் பார்வையை.
உரிய பஸ் வந்து ஏறும் சமயமும்
எந்தத் திருத்தமும் செய்யவில்லை உடையில்.
கருகமணிப் பாசிப் பெண், மற்றும்
கருப்பு நாய் மிஞ்சிய இடத்தில்
பேருந்தில் சென்றவரை நிறுத்திப் பார்த்தேன்.
கால் விரல் தெரிந்தது, கை நகம் தெரிந்தது.
முன்சிகை கலைந்த முழு முகம் தெரிந்தது.
மார்பு முற்றிலும்
மறைந்து போயிருந்தது.

அரைகுறையாக
-------------------------

முழுதாகப் பார்த்திருகிறாயாடா நீ?
இடப் பக்கம்போகிறவர்
வலப் பக்கம் போகிறவரிடம் கேட்டார்.
எதைப் பார்ப்பது பற்றி அவர்
இப்படிக் கேட்டாரோ?
எதையும் முழுதாகப் பார்க்கமுடியாது என்றும்
எதற்குமுழுவதையும் பார்க்கவேண்டும் என்றும்
எதுவுமே முழுதல்ல என்றும்
அடுத்தடுத்து எனக்கு
அரைகுறையாகத் தோன்றுவதை
உங்களைத் தவிர
இயம்புவேன் யாரிடம்?


எதிரொளிக்கும்
------------------------


தேயிலை கொதிக்கும்
வாசனையை விரும்பிய முகத்துடன்
வால் உயர்த்திப் போகிறது கரிய பூனை.
சென்ற நூற்றாண்டின் நீராவியிலிருந்து
இந்த வெயில்தினத்திற்கு நகர்கிற பார்வையுடன்
சினேகிதனின் அப்பா பிரம்பு நாற்காலியில்
சரிந்திருக்கிறார், இடுப்பு வார் அணிந்த
அரைக்கால் சட்டையுடன்.
தோல் சுருங்கிய முதிய ஒற்றை விரலால்
தட்டெழுத்துச் செய்யும் வயோதிகச் சத்தம்
விலகும் காகிதத்தின் மேல் ஒலிக்கிறது
வினோதமாக உள் அறையிலிருந்து.
மரப்படிகளின் வழி மேலேறிப் போன சினேகிதன்
விசிலடித்து அவனுடைய
வளர்ப்புப் பறவையுடன் பேசுகிறான்
காதலி பெயர் சொல்லி.
சுவரோரம் சாத்திவைத்துவிட்டு வந்த
சைக்கிளின் கைப்பிடியில்
எதிரொளிக்கும்  ஒளிக்கிரணம்
ஏளனமாகச் சிரிக்கிறது என்
வியர்வைக்கறை படிந்த
நீலச்சட்டையைப் பார்த்து.
இசைத்தகடு இரவல் வாங்குவதற்கு
வந்ததாகவே சொல்லியிருக்கிறேன்.
இரண்டே இரண்டு வருக்கியும்
கருப்புத் தேனீருமாவது தராமலா போவார்கள்?


முற்றிலும் குலைகிற
-----------------------------------


இந்தப் பாதையைத் தவிர்த்துவிட்டு
பேருந்து நிறுத்தத்திற்குச் செல்ல
எந்த மாற்றும் இல்லை எனக்கு.
நீண்ட காலமாகவே தொங்குகிறது
அகற்றவே அகற்றாமல்
மூன்றாம் வீட்டு வாசலில்
அந்தத் திரைச்சீலை
ரத்தத்தில் நெய்த நிறத்தில்.
நெடுங்குருதி எனும் வர்ணிப்புக்கு
முற்றிலும் பொருந்துவது அது.
சித்தம் கலங்கிக் காற்றில் புரள்வதும்
அப்போதுதான் கத்தி செருகப்பட்டதாக
வெயிலில் துடிப்பதுமாக அது
உண்டாக்கும் பதற்றத்திற்குக்
கணக்கே இல்லை.
இரண்டாவது வீட்டைத் தாண்டும்போதே
முற்றிலும் குலைகிற நிம்மதியுடன்
மிச்சமிருக்கும் ஒவ்வொரு நாளையும்
எப்படிக் கழிப்பது நான்,
நீங்களே சொல்லுங்கள்.


கல்யாண்ஜி
உயிரெழுத்து - பிப்ரவரி 2012.

Thursday 24 May 2012

உயிர் எழுத்து கவிதைகள் -




அவரவர் திசையில்
-------------------------------

தும்பைச் செடிகளுக்கிடையே
ஒற்றையடிப் பாதையில் வந்த அவர்
கட்டுமானம் முடியாத
தேவாலயம் நோக்கிய பிரார்த்தனையில்.
மழைக்காலப் புனலோடிய
கருநீல மினுமினுப்புக்கு அப்பால்
செம்மண் மைதானத்தில் பூத்திருந்த
மண்புழுத்துளைகளை
பறித்துக் கொண்டிருந்தது என் பார்வை.
இரண்டுபேருக்கும் சமதூரத்தில்
ஒரு ஒற்றைச் செருப்பு,
அப்போதுதான் இறந்த
வெதுவெதுப்பான பறவையாக
மல்லாந்து.
சேதாரமற்ற அதன் சாம்பல்நிறப் புரளலை
பார்த்துவந்த அவரும் சொன்னார்
அடிபட்ட மைனாவாக அதை நினைத்ததை.
ஒரு துக்கமான சிரிப்பின் சிறகுவிரித்தலுடன்
அவரவர் திசையில்
பறக்கத் துவங்கினோம் அப்புறம்


திங்கட்கிழமைக்காரர்களுக்கு.

ஒரு திங்கட் கிழமை காலைபோலவே இல்லை
இந்தத் திங்கட் கிழமை காலை.
பனி தன் சதுரங்கத்தை நிகழ்த்துகிறது
வேறுவேறு காய்நகர்த்துதல்கள் கொண்டு.
மற்றொரு வீட்டுப்பெண்ணின்
தளர்வாடை ஒன்றைத் தவறாக
நம் உருப்படிகளில் வைத்துவிட்ட
சலவையாளராகச் சிரிக்கிறது
வேறொரு வாரத்தின் வியாழக்கிழமையை
வெதுவெதுப்புடன் மடித்து
என்முன் கொடுக்கும் டிசம்பர் 12ம் தேதி.
இந்த நாளை இன்னொரு நாளாகவும்
இன்னொரு காலையை இன்றின் காலையாகவும்
வாழும் நெருக்கடி புதிதில்லை
உங்களுக்கும் எனக்கும்.
எந்த ஆட்சேபணையும்
இராது என நம்புகிறேன்
இந்தத் திங்கட் கிழமை காலை
எந்த ஒரு திங்கட்கிழமை காலைபோலவே
இருக்கிறது எனும் அறிந்த பொய்யுடன்
இறுதிவரியை முடிப்பதில்.


இன்னொன்றாக.
---------------

தும்புக் கயிறு தரையில் இழுபட,
தொலைதூரக் காம்புகளிலிருந்து
ஓடிவரும் செவலைக் கன்றுக்குட்டி
திகைத்து நிற்கிறது
தெரு தொலைந்துபோன மிரட்சியில்.
ஈரப்பதம் உலர்த்தி நகரும்
டிசம்பர் இளவெயிலில்
மேகத் துணுக்கொன்றின்
நிழல் விழுந்து அகல்கிறது
இன்னொன்றாக உண்டாகிவிட்ட
புதிய தெருவில்,
என் மேல்.


முடிந்தால்
-----------------


முடிந்தால்,
பொத்தான் உதிர்ந்த உங்களின்
பழைய சட்டை ஒன்றை
உடையாத கண்ணாடிமுன் இப்போது
தனியாக அணிந்து பாருங்கள்.
முடிந்தால்,
உங்கள் கருப்பு வெள்ளைப் புகைப்படத்தின்
களங்கமின்மையை
துரோகம் மினுங்கும் இன்றைய வெளிச்சத்தில்
கை நடுங்க உற்றுப் பாருங்கள்.
முடிந்தால்,
குடைவரையாய் மனதில் செதுக்கிய
ஐந்து இலக்கத் தொலைபேசி எண்ணில்
உங்களின் ஒளித்துவைக்கப் பட்ட காதலியுடன்
ஒரு ஏழு இலக்க உரையாடல் நிகழ்த்துங்கள்.
முடிந்தால்,
உங்களுக்குப் பிடித்த கண்டசாலா பாடலை
இரண்டாவது ஆட்டம் பார்த்துத் திரும்பிய
இன்றைய இரவில்
அயர்ந்துறங்கும் மனைவியின்
ஒருச்சாய்ந்த உடல்பார்த்தபடி கேளுங்கள்.
முடிந்தால்,
உச்சமாகத் துய்த்த கலவியொன்றின்
உன்மத்த ஞாபகங்களுடன்
உபயோகமற்றுப் போன உங்களின் குறியை
பழைய பம்பரமாகப் பாருங்கள்.
முடிந்தால்,
இதற்கு முந்திய வாடகை வீட்டில்
ஜன்னல்வழி எறிந்ததில் முளைத்த
சப்போட்டா மரக் கிளையில்
பதிபோட்டுக் காத்திருக்கும் பூனையை
பாருங்கள், ஒரு பூனையைப் போலவே.
முடிந்தால்,
உங்களுடைய ஆதி நாட்குறிப்பு ஒன்றின்
முடியாத கசப்பு வரிகளுடைய கவிதையை
என்னிடமிருந்து திருடப்பட்டிருக்கும்
இந்தப் பேனாவால் இப்போதே
எழுதி முடித்துவிடுங்கள்.


இப்படித்தான்.
--------------------- 

நீண்ட காலம் ஆயிற்று
சுவரில் கோடிட்டுச் செல்லும்
சிற்றெறும்புகளின் ஊர்வலம் பார்த்து.
எதிரெதிர் நின்று பறிமாறிக்கொள்ளும்
முத்த ரகசியம் வழியும்
ஈர நைப்புணர்ந்து.
காரணமற்ற வன்மத்தின் பெரும் கிளர்ச்சியுடன்
வரிசை கலைக்கத் துடிக்கும்
வலது சுட்டுவிரலைத்
திசை திருப்பிக் கொண்டிருந்தது
வெயிலை இழுத்திழுத்து நகரும்
இலை விளிம்புப் புழு ஒன்று.
ஒரு கலகம், ஒரு வன்முறை நிகழாமல்
தவிர்க்கப்படுவதெல்லாம்
இப்படித்தான்
எளிதாக, தானாக.

%
கல்யாண்ஜி
உயிரெழுத்து - பிப்ரவரி 2012


.
 
 

Tuesday 22 May 2012

யாரும், யாரையும்...

சில காலைகளில், நம்மைப் போல பறவைகளுக்கும் சீக்கிரம் விழிப்பு வந்துவிடும் போல.

உடலின் கடிகார முட்களை, அதன் தேவைக்கு ஏற்ப நம் உடலே திருப்பி
வைத்துக் கொள்கிறது. விலாப் புறச் சிறகுகளை மனமே போதுமான
அளவில்  விரித்துக் கொள்கிறது. பறவைகளுக்கும் அப்படித்தான் இருக்க
வேண்டும்.

பறவைகள் இந்த தினத்தில் அடிக்கப்போகிற வெயிலை முன்னுணர்கிறது.
ரமணனை விடவும் வானிலை அறிவு பறவைகளிடம் துல்லியம். அதற்கு ஏற்ப எல்லாப் பறவைகளும் தன் சிறகை உலர்த்திக் கொள்கின்றன. அலகு
கோதி இடவலச் சிறகுகளைச் சீரமைக்கும் போதே, தான் பறக்கவிருக்கும்
வானின் எல்லையை முன் தீர்மானித்துவிடுகிறது.   அமர்ந்திருக்கும் கிளையில், பறவையின் கால் நகங்களுக்குள் அன்றைய மேகம், அன்றைய காற்று எல்லாம் நகரத் துவங்கிவிடுகின்றன.  அவற்றின் தானியம்,அவற்றின்
புழு, அவற்றைக் குறிவைக்கும் தாக்குதல் குறித்த பதற்றம் பறவைகளிடம்
அதிகாலையில் இல்லை. ஒரு கூட்டுப் பிரார்த்தனையுடன், சேர்ந்திசையுடன்
அவை ஒரு நாளைப் பெற்றுக் கொள்கின்றன.  பெறுதலே பேறு.

இன்று என்னுடனும், எனக்கு முன்பும் குயில்கள் எழுந்திருந்தன. எல்லாக்
குயில்களும் ஒரு குயிலாகி, இடைவிடாத கூவல்களில் பூத்தொடுப்பது
போல ஐந்தரை மணி வெளிச்சத்தைக் கோர்த்துக் கொண்டிருந்தன,  சில
தோப்புகளுக்கு மத்தியில், ஒரு தோப்புக்குள் இருப்பதாக,  ஒரு பெரும்
கூவல்களின் கூடாரத்தில் 19. சிதம்பர நகரக் காலை இருந்தது.    கூடு, கூடாரம்,  அம்பு, அம்பாரம்... இந்தச் சொற்கள் எல்லாம்    பறவைகளின்
அகராதியிலிருந்து நம்முடைய தெருக்களில் சிந்தியிருக்கலாம்.

துறைமுகப் பெருவழிகளில், கன்டெய்னர் லாரிகளிலிருந்து சிந்தும் கோதுமையை, மக்காச் சோளத்தைப் பொறுக்கக் காத்திருந்த தூத்துக்குடிப்
பறவைகள் இருபத்தி இரண்டு வருடங்கள் தாண்டி இப்போது  எனக்குள்
சிறகடிக்கின்றன.  பெரும்பாலும் மைனாக்கள் அவை.

சிட்டுக் குருவிகள் கைபேசிக் கோபுரங்களால் விரட்டப்பட்ட பின்,  சிறு
அளவில் இது போன்ற குடியிருப்புப் பகுதிகளில் ஆறுதல் பறவைகளாக
மைனாக்களே இருக்கின்றன.    தெற்குப் புறவழிச்சாலையில் நசுங்கித் தகடாகக் கிடக்கும்    இவற்றின் சிறகு   மிச்சத்தைப் பார்க்க   நேர்வது இப்போது எல்லாம் முதல் முறையாக அல்ல. வாழ்வதற்காக இதுபோன்ற
நெடுஞ்சாலையைத் தேர்ந்தெடுக்கிறபோதே விபத்து மரணத்தையும்  அது கணக்கில் எடுத்துக்கொண்டு இருந்திருக்க வேண்டும்.

எனக்கு இந்த சமீபத்திய தினங்களில், மைனாக்களைப் பற்றிய இரண்டு
வெவ்வேறு நெடுவழிச் சித்திரங்கள் உண்டு.  வேப்ப மரத்தடியில், நிழல் விற்பனைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட இடம் அது.  ஹெல்மெட்கள் -   சரி,
தலைக்கவசங்கள் -  விதம்விதமான மினுமினுப்புடன் அடுக்கிவைக்கப்
பட்டிருந்தன.  விற்கிற வடக்கத்தி முகம் எதுவும் அருகில் இல்லை.  ஒரே
ஒரு மைனா மட்டும் மேல் வரிசையில் உட்கார்ந்திருந்தது. செதுக்கப்பட்டு
இருந்தது என்பதே சரியான வர்ணனை. நான் தாண்டிச் செல்கிறவரை அது
அசையவே இல்லை. அன்று மாலைக்குள் அதனுடைய சுயசரிதையை எழுதிவிடத் தீர்மானித்துவிட்ட ஆழ்நிலை மீள்பார்வையில் அது இருந்தது.
அதன் அலகின் மேல் பிளவுக்  கடைசியில் மஞ்சள் துளியாக அதனுடைய
மொத்த வாழ்வும் திரண்டிருந்தது. எடையற்ற எடையில், அது தன்னைக் கடைசியாக நிறுத்துப் பார்த்துவிட்ட புன்னகை அதன் நிலைத்த கணகளில்.
வாழ்வு நிரம்பும் நேரத்தின் உயிரின் அசைவறு பரவசம் அது.

இன்னொன்று, மேலப்பாளையம் திருப்பத்தில். பதனீர், நுங்கு எல்லாம் விற்கிறவரின் பக்கத்தில் தேடிச் சோறு நிதம் தின்றுகொண்டிருந்தது.
மெலிவாகக் கூட இல்லை. திரட்சியான உடல். பின் புறம் குவிந்து கிடந்த
ஓலைப் பட்டையின் பச்சைக்குள்,   நுங்குச் சீவல்களுக்குள்,   இளநீர்ப் பிளவுகளுக்குள் அது, யாரும் விழித்துவிடுவதற்கு முன் செய்துமுடிக்க
வேண்டிய களவு போல, தன்மேல் வீசப்படக் காத்திருக்கும் வலையின்
எச்சரிக்கையோடு, குனிந்து குனிந்து கொத்திக் கொண்டு இருந்தது.

நான் என்னுடன் அந்த இரண்டு மைனாக்களையும், அல்லது இரண்டு வித மைனாக்களையும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.     இரண்டுவிதமான
மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கும்போது,  இரண்டு
விதமான பறவைகளிடமிருந்தும் கற்றுக் கொள்ள ஏதாவது இருக்கும்.

இந்த குயில் கூவல் / இந்த அக்காக் குருவிச் சத்தமும் இன்று எனக்கு
ஏதேனும் கற்றுக் கொடுக்கும்.     கற்றிலன் ஆயினும் நிச்சயம் கேட்கலாம்.
கேட்டேன்.   இந்த நாளின் இறுதிக்குள்,  சிறிதளவு நான் ஞானம் எய்துவேன்
ஆகில், அது இந்தக் கேள்வி ஞானத்தில் இருந்துதான்.

இது கேள்வி ஞானமா, கேட்டலின் ஞானமா?
இது போன்ற எந்த சந்தேகங்களும் எழாத,  சந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட
பறவைக்குரல்களின் அதிகாலைத் திரட்சியை, இதைத் தட்டெழுதும் இந்த நேரத்திலும் என்னால் கேட்கமுடிகிறது.

ஒரு பறவை யாரையும் சந்தேகிப்பதில்லை.
ஒரு பறவையை யாரும் சந்தேகிக்கவும் முடியாது.





Sunday 20 May 2012

இப்போதும் கூட


இன்றும் இன்னொரு புகைப்படமே உதவிக்கு வருகிறது.
இதுவும் ஹிந்து ஞாயிறு இணைப்பில் வெளியாகியிருக்கும் ஒன்றுதான்.
மிக எளிய ஒன்று. சுலபமாகத் தாண்டிபோய்விட முடிவது போல, ஆனால் அப்படி முடியாமல், பார்வையைத் தானிருக்கும் மேல்பக்க மூலையிலேயே
நிறுத்துவது.

அந்தப் பெயரை எப்படி உச்சரிப்பது என்று தெரியவில்லை.   அயல் பெயர்களை, அந்தந்த மொழி, அது சார்ந்த இன, பிராந்திய மரபு தெரியாது
முழுமையாக அழைக்க இயலாது.   Sebastian Cortes  என்பதன் பின் பெயரை
எப்படிஎழுதுவது, கோர்ட்ஸ் எனறா, கோர்ட் என்றா அல்லது வேறெதுவும்
ஆகவா? எந்த எழுத்தில் மௌனம், எந்த எழுத்தில் அழுத்தம்?   பேசாமல்,
செபாஸ்டியன் என்பதை வண்ணநிலவன் குரலில் ’செபஸ்தி’  என்று
கூப்பிட்டுவிடலாம்.  நன்றாகத்தான் இருக்கும்.

செபஸ்தியின் அம்மா வழி இத்தாலி. அப்பா வழி பெருவியா.  ஆனால்
செபஸ்தியிடம் இருப்பது அமெரிக்க கடவுச் சீட்டு. 2004 ல் இருந்து மனைவியோடும் இரண்டு குழந்தைகளோடும் ஆரோவில் நகரியத்தில் இருக்கிறார். அவர் பாண்டிச்சேரியை எடுத்த புகைப்பட - கட்டுரைப்  புத்தகம்
வெளியாகியிருக்கிறது. அதில் உள்ள ஒன்றுதான் ஹிந்துவில்.

ஒரு பழைய பாண்டிச்சேரி ‘தெருவடி’ வீடு. இடது பக்கம் மூடிய கதவுகள்
உள்ள ஒரு கம்பி ஜன்னல். நடுவே வீட்டு வாசல்.    ஒன்று    சற்றுத் திறந்திருக்கிற, இன்னொன்று மூடியிருக்கிற மரக் கதவுகள்.  வலதுபக்கமும்
ஜன்னல் உண்டு. அது திறந்திருக்கிறது. ஒரு சிவப்பு சைக்கிள் குறுக்காக.
லேடீஸ் சைக்கிள். வேறு இருசக்கர வாகனங்களும் உண்டு போல.  ஏற்றி இறக்க ஒரு சாய்தளம். ஒரு சருகு இல்லாத துப்புரவான தெருப்பக்க நடை
பாதை. கருப்பு வெள்ளை போக்குவரத்து விளிம்பு பளிச்சென்று.  இதை
எல்லாம் விட முக்கியமானதும், புகைப்படத்தின் ரத்த ஓட்டமும் ஆக, அளந்து எடுத்தது போல மைய ஒழுங்குடன், கவிந்து கிடக்கும் அற்புதச்
சிவப்பு பொகைன்விலா பூக்கள்.

அந்த அடர்த்தியான பூச் சிவப்பு, படத்தின் குவளையை இப்படி மூன்றில் ஒரு பங்கு நிரப்பியிராவிட்டால், இது இவ்வளவு அழகாக இருக்குமா? அந்த சிவப்பு சைக்கிள் இல்லாவிட்டால்? அந்த இடதுபக்க மூடிய ஜன்னலும்
வலதுபக்க திறந்த ஜன்னலும் இல்லாவிட்டால்? இந்த கருப்பு வெள்ளை இல்லாமல் நடைபாதை விளிம்பு நிறமற்று இருந்திருந்தால்   இந்தப் புகைப்படம் எப்படி இருந்திருக்கும்?

நிச்சயம் இவ்வளவு அழகாக இருந்திராது. எல்லாம்  சேர்ந்து இந்தப் படத்தை
நிரப்புகின்றன. ஒரு படுகைக் கூழாங் கல் ஆற்றை நிரப்புவது போல. ஒரே ஒரு ‘நசுக்கூட்டான்’ புழு முருங்கை மரத்தை நிரப்புவது போல. ஒற்றைப்
பெருவிரல் பாலுண்ணி கே. அருணாசலத்தின் அண்ணன் பரமானந்தத்தின்
ஞாபகத்தை நிரப்புவது போல.  எல்லா முழுமையும் ஒரு சிறு புள்ளி வந்து சேரக் காத்திருக்கிறது. ஒரே ஒரு துளி வந்து சேரத் தவித்திருக்கிறது கடல். ஒரே ஒரு சருகை நகர்த்தக் காத்திருக்கிறது கொடுங்காற்று.

அந்த செபஸ்தி புகைப்பட பொகைன்விலா பூக்களைப் போல எங்கள் தெருவிலும் ஒரு காலத்தில் காணக் கிடைத்தது. அப்போது அது பொகைன்
விலா என்றோ போகன் விலா என்றோ தன் அகராதி மற்றும் தாவரவியல் உச்சரிப்புக்களை அடைந்திருக்கவில்லை. எல்லோரும் சொன்னது போல,
‘தாள் பூ’ என்றுதான் நாங்களும் சொன்னோம்.

அது தெருவோர மரம் இல்லை.  கட்டளை ஆபீஸின் கீழ்ப் பக்கமாகவும், தெருவிலிருந்து வடபக்கமாகவும் உள்ளே போனால், ராமச்சந்திர பிள்ளையன் வீடு, வாத்தியார் சிதம்பரம் பிள்ளை வீடு, உலகம்மாச்சி வீடு
எல்லாம் தாண்டினால்,  சங்கரையா பிள்ளையன் வீடு வரும். அந்த வீட்டில்
தான் தாள் பூ அப்படிப் பூத்துக் குலுங்கும்.

வசதியான வீடு. மரக்கட்டை ரீப்பர் அடித்து மேலே படரவிட்டிருப்பார்கள்.
இடது உள்ளங்கையை வட்டமாகக் குவித்து, அதன் மேல் தாள் பூ இலையை வைத்து, வலது கையை அகல விரித்து அடிப்போம்.  ‘டொப்’
என்று சத்தம் வரும். அது ஒரு விளையாட்டு. அது எல்லாவற்றையும் ஒரு
விளையாட்டாக ஏற்றுக்கொள்கிற மனம் இப்போதும் இருந்தால் எவ்வளவு
நன்றாக இருக்கும்.

இந்த வயதில் அல்ல, முறுக்கி முறுக்கி மேலே ஏறிப் படர்ந்திருக்கிற தாள்
பூ கொடியின் / மரத்தின் தாவர அமைப்பு, அதை முதன்முதலில் பார்த்த
சின்ன வயதிலேயெ என்னை ஒரு புதிர் போல ஈர்த்தது.   புதிரை சற்று அவிழ்ப்பதற்குப் பதிலாக, தவறுதலான திசைகளில் தன்னுடைய பிரியை
முறுக்கிக் கொள்வது போல், சமீபத்தில் அந்த வீட்டில் துக்கம் கேட்கப்
போயிருந்த சமயத்தில் கூட, முன்னிலும் அதிகமாக  தனக்கு மத்தியில்
அது காலத்தைப் பின்னிப் படர்ந்து கிடந்தது. அந்த வீட்டில் நிகழ்ந்திருந்த
மரணத்தையொட்டி, ‘காடு மாதிரிக் கிடந்த’  அதை ‘அரக்கி’விட்டிருந்தார்கள்.
எந்த இலையும் எந்தப் பூவும் இன்றி, அது தான் இது காறும்  வளர்ந்து
நிற்கிற வீட்டின் துக்கத்தைக் காத்துக்கொண்டு இருந்தது.  தன் அத்தனை
விரல்களையும் இழந்த பிறகும் மீண்டும் தன் பூக்கால ஓவியம் ஒன்றை
வரைவதற்கான தீவிரமான வண்ணங்களைச் சேகரிக்கத் துவங்கிவிடும் தீர்மானத்தில் இருப்பதை என்னிடம் சொல்லியது.

ஒரு காலத்தில் அது அப்படிப் பூத்தது.
ஆனி, ஆடியில் அடிக்கிற காற்றில் அந்தப் பூக்கள் தெருவில் தரையோடு தரையாய் நகரும். நான் படித்து முடித்து வேலை கிடைக்காது இருந்த,
பறப்பதற்கு முந்திய புழுக்காலம் அது..  தெருவாசல் நடையிலேயே தனியாக நின்றுகொண்டு இருப்பேன். தரையில் நகர்கிற அந்தத் தாள் பூ எதுவரைஅப்படிச் செல்லும் எனப் பார்க்கப் பார்க்க, பார்வை மயக்கத்தில் தெருவே இளம் சிவப்பாகி நகர்கிற மாதிரி இருக்கும். உலகத்தில் தாள் பூவை அச்சு அசலாக வரைந்துவிடக் கூடிய ஓவியர்களின் பட்டியலில் முன்வரிசையில் இருக்கும் தகுதி அப்போது எனக்கு இருந்தது.

கண்ணதாசனில் வெளிவந்த என்னுடைய ‘புளிப்புக் கனிகள்’ கதையில்
பிரபா வருகிற போது இந்த பொகைன்விலா பூக்களும் வரும். ‘செம்பூக்கள்
காற்றில் தரையை மெழுகியபடி’ என எழுதியிருப்பேன். பிரபா காணாமல்
போய்விட்டாள். இந்தப் பூக்கள் காணாமல் போய்விட்டன. ஒரு வார்த்தை
கூட யாருடனும் பேசாமல், மிக நேர்த்தியான உடைகளில் சாயுங்காலம் மட்டும் தெருவில் நடந்து செல்லும் அந்த வீட்டுக்கார  சங்கரையா பிள்ளையனும். நடு வகிடு எடுத்து சுருட்டை முடி வாரி, முண்டா பனியன் தெரிய மல் ஜிப்பா போட்டு வேட்டி கட்டி,  நாம் பார்த்தால் நம்மைப்
பார்த்துச் சிரிக்கிற அவருடைய மூத்த மகனும். சமீபத்தில் அதற்கு அடுத்த மகனும் காணாமல் போய்விட்டார்கள்.

தெருவும் நானும் மட்டும் என்ன வாழ்கிறோம்?
நாங்களும் காணாமல் போய்விட்ட மாதிரிதான்.  பொதுவாக, ஏற்கனவே
காணாமல் போன ஒன்று, இப்போது வேறு எதையோ தொலைத்துவிட்டுத்
தேடும் போது, தற்செயலாகக் கிடைக்கும் இல்லையா.  செபஸ்தியின் இந்தப் புகைப்படத்தின் மூலம், காணாமல் போன எங்கள் 69 -70 ம் வருடத் தெரு இன்று கிடைத்துவிட்டது. தாள் பூ கிடைத்துவிட்டது.   சொல்ல முடியாது, பிரபா கூடக் கிடைத்து விடுவாள்.

கிடைக்காமலே இருக்கப் போகிறவன் எப்போதும் நானாகத்தான் இருக்கும்.
அல்லது    இப்படி  வைத்துக்   கொள்ளலாம்.    தொலைத்துவிட்டுத் தேடிக்கொண்டு இருப்பது இப்போதும் கூட என்னைத்தான்.










மலைகள்.காம் இணைய இதழ் 2ல் இருந்து.

இன்றைக்கு
--------------------

காக்காய் கத்தி
இவ்வளவு நேரம் ஆகிவிட்டது.
காதில் விழவே காணோம்
உப்பு விற்கிறவரின் குரல்,
கோலப்பொடி விற்கிறவரின் குரல்.
என்னவோ ஆகத்தான் போகிறது
இந்த உலகத்துக்கு
இன்றைக்கு.
*
வீட்டு நடையில்
நின்றுகொண்டிருந்தேன்.
அருகில் வந்து
ஒரு கருப்புக் கன்றுக்குட்டி
அசையாமல் என்னைப் பார்த்தது.
போய்விட்டது.
இது போதும் எனக்கு
இன்றைக்கு.






நீல வட்டத்தின் தடாகம்.
*

தீர்மானித்தபடியே
மழை துவங்கு முன்
அடுக்ககம் வந்துவிட்டாள்.
பொத்தான் அழுத்தி
மின் தூக்கி மேல் நகர்கையில்
ஆட்டோ விலகிச் செல்வதை
கேட்டாள்/பார்த்தாள்.
உப்பரிகைக் கொடியில்
உலர்ந்த ஆடைகளைச் சேகரிக்கையில்
பெரும் துளியிட்டு மழை துவங்கியது.
அவள் செல்லத் தொட்டியில்
பூத்திருந்தது வெண் சங்கு புஷ்பம்.
படுக்கையறையில் குவித்து
ஆடைகளை மடிக்கையில்
ஆளுயரக கண்ணாடி அழைப்பது போல
அந்தரங்கப் பெயரின் உச்சரிப்பு.
முற்றிலும் அகற்றிக் கொள்ளச் சொன்ன
இடவலக் குரலை விரும்பினாள்.
கீழ்ப்படிந்துகொண்டே வந்தவளின் காலடியில்
கழன்றுவிழுந்திருந்தன உள்ளாடைகள்.
கருப்புக் காப்பியா, பச்சைத் தேனீரா
என்பதைத் தீர்மானித்தாள்
மார்புக் காம்புகளில் ஒன்றைத் தொட்டு.
கொதிக்கிற பாத்திரத்தை அகற்றி
சுனையெனப் பொங்கும்
ஜ்வாலையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
.பழைய பாடல் ஒன்றைப்
பாடிச் சுழலும் போதும்
நீல வட்டத்தின் தடாகத்தில் குதிக்கும்
முன் தீர்மானத்தை எடுக்கவே இல்லை.
நிகழ்வது அனைத்தின் அசாதாரணம் உணர்ந்து
தனிமையின் பதற்றத்துடன் காத்திருந்த
பீங்கான் கோப்பையில்
மின்னலிட்டு நிரம்பத் துவங்கியது
அவள் மேல் பற்றிப் பெய்த
அந்தி மழை.
%
கல்யாண்ஜி

Saturday 19 May 2012

கல்யாணி.சி - ஒரு பிறந்த நாள் பரிசு.

தேதி சரியாக ஞாபகமில்லை.
சுதீர்செந்திலின் பிறந்த நாள் அக்டோபர் கடைசியில் வரும்.  அப்படியெல்லாம் சரியாக அட்டவணைப்படுத்தி, அதிகாலையில் முதல் வேலையாக வாழ்த்துச் சொல்லும் பழக்கம் ஆதியில் இருந்தே எனக்கு இல்லை. போன வருஷம் சொல்லியிருப்பேன். இந்த வருஷம் கல்யாணி
அனுப்புவான் என்று எதிர்பார்ப்பார்கள். அனுப்பியிருக்க மாட்டேன். சில பேருக்கு சாயுங்காலம், ஒரு தடவை ராத்திரி பத்து மணிக்குக் கூட, அல்லது இரண்டு நாட்கள் கழித்து எல்லாம் அனுப்புவேன். எப்போது ஞாபகம் வருகிறதோ அப்போது.  புள்ளி வைத்தது மாதிரி, காலையில் பேப்பரை விரித்ததும் குரு பெயர்ச்சி, அட்சய திருதியை என்று மேலே
விழுந்து ஆவி சேர்த்துக் கட்டுகிறது போல எல்லாம் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லக் கட்டுபடியாகுமா நமக்கு?
இன்றைக்குக் கூட ஒரு குறுஞ் செய்தி வந்திருக்கிறது, “இன்று நீங்கள் என்னை ஆசீர்வதிக்கலாம். எனக்கு சந்தோஷம் தருவது அது” என ஆங்கில
நெருக்கத்தில். நெருக்கம் தானே உண்டு. அதென்ன ஆங்கில நெருக்கம்
என்று கேட்கத் தோன்றும்.   மொழி சில காரியங்களைப் பண்ணுகிறது. சில சமயம் தென்னந்தோப்பு நிழல், சிலசமயம் அரச மரநிழல், சில சமயம் ஆற்றங்கரை மருத மர நிழல். நிழல்தான், ஆனால் மரம் வேறுவேறாகிச்
சில காரியங்களைப் பண்ணுகிறது இல்லையா, அப்படி.
சுதீர் செந்திலுக்கு அனேகமாக குறுஞ்செய்திதான் அனுப்பியிருப்பேன் என நினைக்கிறேன். தொலைபேச்சு உரையாடலுக்கும் நமக்கும் அவ்வளவாக
எப்போதுமே தோதுப்படாது. பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னதும் சுதீர்
செந்தில், ’எனக்கு ஒரு பிறந்த நாள் பரிசு தரவேண்டும்’ என்று கேட்டார்.
நமக்குத் தெரியாதா, வெள்ளரிப் பிஞ்சு விற்கிற பெண்ணிடம், மிஞ்சி
மிஞ்சிப் போனால் கூட ஒரு பிஞ்சு போடச் சொல்லப் போகிறார்கள்.
பொது நூலகம் என்றால் , நாம் இப்போது படித்துக் கொண்டிருக்கும் பத்திரிக்கை, நம் வாசிப்புக்குப் பிறகு அவர்களுக்குத் தேவைப்படுகிறது.
கட்டை விரலை உயர்த்தி புத்தகப் பையும் அரக்குக் கலர் ட்ராயருமாக
ஒரு பையன் குலவணிகர்புரம் கேட் பக்கம் கைகாட்டினால், ஊசிக் கோபுரம் ஸ்டாப் பக்கம் அவனை இறக்கிவிடவேண்டும். நம்மை மாதிரி  எழுதுகிறவனாக இருந்தால் அடுத்த இதழுக்கு ஒரு கதை தர வேண்டும்.
அதற்கு மேல் தர நம்மிடம் என்ன வக்கு இருக்கிறது?
சுதீர் கதை கேட்கவில்லை. கவிதை கேட்டார். அடுத்த மாதத்திற்கு அல்ல. அடுத்த வருடம் முழுவதற்கும். ‘பன்னிரண்டு இஷ்யூவுக்கும்
கடைசி பக்க கவிதை தரணும் சுந்தரம்’ என்றார். ஒப்புக் கொண்டேன். க்டைசித் தவணை வரை அனுப்பாமல் நாளைக் கடத்துகிறவன் என்பதால்,
‘மாசா மாசம் எத்தனாம் தேதிக்குள்ள அனுப்பணும்?’  என்று கேட்டதற்கு சுதீர்,  ‘உங்களுக்காக இது.  பன்னிரண்டாம் தேதி லாஸ்ட் டேட்’
என்றார்.
இதைச் சுதீர் சொன்னதும் நான் கேட்டுக் கொண்டதும் எல்லாம் அக்டோபர் மாதம்.    விகடனில் அதற்குச் சற்று முன்பாக ஒரு வாரத்தில்தான் அந்த
என்னுடைய சிறுகதை, ‘எண்கள் தேவையற்ற உரையாடல்கள்’ வெளியாகி இருந்தது.  நான் தொடர்ந்து சிறுகதை எழுதும் உத்தேசத்தில்தான் இருந்தேன். என் உள்ளூர ஆசை,   2013க்கு ஒரு புதிய சிறுகதைத் தொகுப்பு கொண்டுவருவது.  ஆனால், நான் தொடர்ந்து கவிதைகள் எழுத ஆரம்பித்துவிட்டேன். ‘மணலுள்ள ஆறு’ தொகுப்பின் மன நிலை மேலும்
கண்ணி விலகாமல் சங்கிலி கோர்த்தது.   உயிர் எழுத்து இதழுக்கு மாதா மாதம் என்று ஒப்புக்கொண்டது, விகடன் கதையையே இன்றுவரையிலான
என் சமீபத்திய ஒன்றாக வைத்திருக்கிறது.
மாதம் ஒன்று அனுப்பச் சொல்லியிருந்தார். நான் ஏழெட்டு, சமயத்தில்
பத்துப் பனிரெண்டு கவிதைகள் அனுப்பிவைத்தேன். கடைசி பக்கக் கவிதை என்பது கடைசிப் பக்கத்திலும் கவிதை என்றாயிற்று. இந்த ஐந்து மாதங்களிலும் உயிர் எழுத்துவில் முப்பதுக்குக் குறையாமல் வெளியாகி
இருக்கும்.  வேறு யாருக்குப் பிடித்திருக்கிறதோ, இல்லையோ , எழுதுகிற
எனக்குப் பிடித்திருக்கிறது. இதுவரை நான் கவிதையென எழுதிவந்ததன்
 சாயல் மாறாமலும். அங்கேயே நிற்காமல் முன் நகர்ந்தும், என் சற்றே
மனத்தடைகள் குறைந்த இந்த வயதின் விசாலத்துடனும் வாழ்வு குறித்த அக்கறையுடனும் அவை இருப்பதாக நான் நினைக்கிறேன்.
எஸ்.ஐ.சுல்தான் தொடர்ந்து என்னுடைய கவிதைகளைப் பிரசுரித்த போது எல்லாம் அந்தக் கவிதைகளுக்கு அதிக வாசிப்பும். அவர் எப்போதெல்லாம் என் கதைகளைப் பதிவேற்றினாரோ அப்போதெல்லாம் அதற்குக் கவிதைகளுக்கு உரியதை விடக் குறைவான வாசிப்பும் நிகழ்வதை உணர முடிந்தது.
இதுவரை, இந்த சமவெளியில், வண்ணதாசனை மட்டும் அறிந்தவர்கள் போக, கல்யாண்ஜி ஆகவும் என்னை எதிர்பார்க்கிற ஒரு பகுதியினர் இருக்கக்கூடும் அல்லவா. அவர்களுக்காக, அந்த ஏற்கனவே இதுவரை பிரசுரமான, ஏற்கனவே வாசிக்கப் பட்ட,  உயிர் எழுத்துக் கவிதைகளில்
சிலவற்றை இங்கே தரத் தோன்றுகிறது.  மிகுதி இருக்கிற ஜூலை முதல் டிசம்பர் வரையிலான இதழ்களுக்குக் கவிதை தந்த பிறகும், நான் கவிதைகள் எழுதுவேன் ஆகில், எழுத எழுத நேரடியாக இங்கே பதிவேற்றவும் விரும்புகிறேன்.
ஒரு துவக்கம் ஆக, உயிர் எழுத்து கவிதைகள்.
கல்யாண்ஜி என்றால் என்ன, கல்யாணி.சி என்றால் என்ன, எல்லாம் ஒன்றுதான் என உங்களுக்குத் தெரியாதா?

உயிர் எழுத்து ஜனவரி-2012.

இதற்குமேல் உருளமுடியாது
கல் நதியைவிட்டுக் கரையேறிற்று.
இதற்குமேல் வழவழப்பாக்க முடியாது
கல்லை ஒதுக்கிவிட்டு
நதி ஏகிற்று.


2.
முதன்முதல் பார்க்கையில்
ஒரு கை உடைந்திருந்த
மர நாற்காலியில்
உட்கார்ந்திருந்தார் முருகேச மாமா
ஓரம்தைத்த பனையோலை விசிறி
ஒன்றை வீசிக்கொண்டு.
ஒடிந்த பின் நாற்காலியும்
கிழிந்த பின் விசிறியும்
இறந்தபின் மாமாவும்
எனக்குள் ஒன்றாக அப்படியே
இருப்பது எப்படி?

3.
பார்த்தாயிற்று இந்தப் பனிக்காலத்தின்
முதல் மஞ்சள் பூவை
விரையும் ஜன்னல் வழியாக
நேற்றே என் ரயில் பயணத்தில்.
பீர்க்கங் கொடி படர்ந்த
நீர்க்கருவையின் பச்சை மறைவிலிருந்து
அவசரமாக எழவேண்டியவராக இருந்தார்கள்
அந்த இரண்டு பெண்களும்.
என் 66ம் வயதை நோக்கி
சலனமின்றி நகர்ந்துகொண்டிருந்த
இந்த டிசம்பர் அதிகாலையின்
முதல் ரயில் பூச்சியை அடையாளம் காட்டுவதாக
ஞாயிற்றுக் கிழமை ஆராதனை மணி.
எப்போதோ பார்த்த வளையல் பூச்சியின்
முதுகுப் புள்ளிகள் தேடி
ஊர்ந்துகொண்டிருந்தது ஆயுள்
என் ஆயிரம் நரைமயிர் அசைத்து.
சிவப்பாக வாசலில் தொங்கும்
முதல் கிறிஸ்துமஸ் நட்சத்திரத்தை
காண்பிக்கும் இரவு வரும்போது
சாம்பல் பூனை மதில் மேலிருக்க
கணவனின் சினேகிதி ஒருத்தியுடன்
கைபேசியில் சிரித்துப் பேசும்
உங்களைப் போல ஒருவர் நிற்பதைப்
பார்க்கமுடிந்தால் இருக்கும் உன்னதமாய்.



Friday 18 May 2012

காந்தியைப் போல் ஒரு...


காந்திமதியை நான் இதுவரை பார்த்ததில்லை.
சங்கரியம்மாதான் பார்த்திருக்கிறாள். யார் யாரிடமோ எல்லாம் விசாரித்து, இந்த மாதிரி வீடு பெருக்கித் துப்புரவாக வைக்க வேண்டும், குடிப்பதற்கு ஆற்றுத்தண்ணீர் இரண்டு குடம் பிடித்துவைக்க வேண்டும், சாப்பிட்ட ஏனம், தட்டு, தம்ளர், டிஃபன் கேரியர் கழுவிக் கவிழ்த்த வேண்டும். ஆத்திர அவசரத்துக்கு ஒரு மடக்கு வென்னீர் தேவை என்றால் வைத்துக் கொடுக்க வேண்டும். ‘ஒண்ர வாடத்துக்கு ஒருக்கதுணி துவைத்துப் போட வேண்டும்.
இதைவிட முக்கியமானது. குளியலறையைப் பாசி பிடிக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். வயசாளி நடமாடுகிற இடம். ஒன்று கிடக்க ஒன்று ஆகிவிடக் கூடாது ‘  என்று நல்ல  விதமாக எடுத்துச் சொல்லி அமர்த்திவிட, எல்லாவற்றையும் சரி சரி என்று
‘ஏத்துக்கொண்டு ‘  வேலையை ஒப்புக் கொண்டவள்தான் காந்திமதி.
காந்திமதியை இனி, காந்தி என்றே சொல்லுவோம். எப்படி எல்லோரும் கூப்பிடுகிறார்களோ அப்படிச் சொன்னால் தப்பு இல்லையே. அதுதானே நன்றாகவும் இருக்கிறது. காந்திக்கு
என்ன வயதிருக்கும், எத்தனை பிள்ளைகள், வீட்டுக்காரர்
என்ன வேலை பார்க்கிறார், முன்னே பின்னே ஆள் எப்படி,
அப்படி இப்படி பேச்சு ஒன்றும் இல்லையே. இதுக்கு முந்தி வேலை பாத்த வீட்டில இருந்து அவ ஏன்
நாம கூப்பிட்ட உடனே டக்குண்ணு நிண்ணுட்டா. வாய்
நீண்டுட்டாக்கூட பரவா இல்ல. கை நீண்ட்ரப் பிடாதுல்லா..
இப்படி ஏகப் பட்ட விசாரணைக்கு அப்புறம்தான் , “ அப்போ
வார ஒண்ணாந்தேதியில இருந்து வேலைக்கு வந்திரு. நாளும் கிழமையுமா இருக்கு. இன்ணைக்கே தூத்துப் பெருக்கி, வாசல்ல தண்ணி தெளிச்சு விட்டுப் போயிரு, என்ன காந்தி? “ என்ற வார்த்தையே வந்திருக்கும்.
இவ்வளவும் அப்பா இருக்கிற 21.இ. சுடலைமாடன் கோவில்
தெரு வீட்டைப் பராமரிக்கவும், ‘ பத்து நாளைக்கு ஒருக்க, ஒட்டரை அடிச்சு நூலாம்படை இல்லாமல் பார்த்துக் கொள்ளவும் தான். காந்தி வேலைக்குச் சேர்ந்து ஒரு வருஷத்துக்கு மேல் இருக்கும். அப்பாவைப் பார்க்கப் போகிற ஒரு தடவை கூட நான் காந்தியைப் பார்த்ததில்லை. அதைப் பற்றி அப்பாவிடம் பேச்சு
எடுத்ததும் கிடையாது. பேச்சு வாக்கில் அப்பாவோ, வள்ளிநாயகமோ காந்தி சத்துணவுக் கூடத்தில் ஆயாவாக இருப்பதாகச் சொன்ன ஞாபகம். சங்கரியம்மா கூடக் கேட்பாள்.
“ வேலைக்காரி ஒழுங்கா வாராளாமா. வீடு பாக்கிறதுக்குத் துப்புரவா இருக்கா? பாத் ரூம்லாம் கழுவிடுதாளா. அப்படியே வழு
வழுண்ணு வழுக்கிவிழுத மாதிரிக் கிடக்கா? “ . பொதுவாகவே இந்த ஒழுங்கு, துப்புரவு குறித்து எல்லாம் அதிக அக்கறை இல்லாத நான் அதற்கான பதிலை வேறு மாதிரி சொல்வேன்.
பார்க்கதுக்கு அப்பா நல்லா இருக்கா “. யார் நன்றாக இருக்க வேண்டுமோ அவர்கள் நன்றாக இருந்தால் போதாதா? இடங்களை விட மனிதர்கள் அல்லவா முக்கியம். எப்பவாவது ஒரு தடவைதான் அப்பாவையே பார்க்கிறேன். அந்த நேரத்தில் அப்பாவையே பார்த்துவிட்டுப் போகிறேன். அதை விட்டுவிட்டு, கதவுக்குப் பின்னால் ஒட்டரை தொங்குகிறதா, புறவாசல் கதவை ஒழுங்காக தாழ்ப்பாள் போட்டிருக்கிறார்களா? வாசல் கல்லில் இரண்டு மூன்று நாய் படுத்திருக்குமே. குடம் செப்(பு)பானை எல்லாம் களிம்பு இல்லாமல் விளக்கியிருக்கிறதா? இதையெல்லாம் பார்த்து அந்த நேரத்தை வம்பாக்க முடியுமா?
மேலும் வாசல் கல்லில் இரண்டு நாய் படுத்திருப்பது, ஒருவகையில் ஆள் நடமாட்டம் இல்லாத அந்த வாசலில் நன்றாகத்தானே இருக்கிறது.  ஒரு முதுமையும் முதிர்ச்சியும் நிறைந்த மனிதர் தனியாக இருக்கும் வீட்டின் சித்திரத்தை அவை 
அப்படிப் படுத்திருப்பதன் மூலம் முழுமைப் படுத்துகின்றன என்பதுதானே நிஜம்.  செப்புப் பானை, ஆற்றுக்குள் கிடக்கிற
வட்டப் பாறை மாதிரி எப்படிப் பார்த்தாலும் அழகாகத்தானே இருக்கும்.

காந்தி என்கிற மனுஷி, அந்தச் செப்புப் பானையை விட, கல்நாய்களை விட ஒருபோதும் குறைந்தவளாக இருக்க முடியாது அல்லவா. அவளைப் பார்க்க அவசியம் இல்லை.
அவள் ஒழுங்காக, அவளுடைய சத்துணவு வேலை போக ஒழிந்த நேரங்களில், நிச்சயம் அப்பா இருக்கிற வீட்டை சுத்தமாகவே வைத்துக் கொள்வாள். நிச்சயம் குடிக்க தண்ணீர் இல்லாமல்
வெற்றுப் பானையாக இருக்க விட்டிருக்க மாட்டாள். கண்டிப்பாக
‘என்ன ய்யா. இந்த நேரத்துல படுத்துக் கிடக்க மாட்டியளே. ஒடம்புக்குக் கிடம்பு சரியில்லையா. சுடுதண்ணி வச்சுத் தரட்டுமா.  சாப்பிட்டேளா இல்லயா. சந்திப்பிள்ளையார் முக்குக் கடையில சுக்குவென்னி வாங்கியாரவா?’  என ஒரு நாளாவது அப்பாவைப் பார்த்துக் கேட்டிருப்பாள்.  எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது.
அப்பாவிடம், எந்த மனிதரும் மனுஷியும், அப்பாவைப் போலவே உண்மையாக மட்டுமே இருக்க முடியும்.  அப்பா அப்படி.
அப்பா அப்படி எனபது அப்பாவைப் பார்த்த நிமிடமே யாருக்கும் தெரிந்துவிடும். காந்திக்கு மட்டும் தெரிந்திருக்காதா என்ன?
கொஞ்சம் அல்ல, ரொம்பவே தெரிந்திருந்தது.  
வே.முத்துகுமார் நடத்துகிற ‘தி.க.சிவலைப்பூவை சமீபத்தில்,
அப்பாவின் புகைப்படங்கள் தேவைப்பட்ட ஒரு அவசரமான
மாலையில், திரும்பவும் திருப்பிக் கொண்டிருந்தேன். அதில் இருக்கிற சமீபத்திய அப்பாவின் புகைப் படங்கள் மிக அழகானவை. எது அழகு? கனிவுதான் அழகு. அப்பா அவ்வளவுகனிந்து இருக்கிறார்கள். கனிவின் ஆனந்தம் சதா மினுங்கும் உடல் மொழியை காலம் அப்பாவின் மடியில் வைத்திருக்கிறது.
மனிதர்கள் வாழ்வாலும் அனுபவத்தாலும், அப்படி அனுபவித்து  அனுபவித்து இந்த வாழ்வைப் புரிந்துகொள்வதாலும் இப்படி
அழகுற்றுக் கொண்டேதானே வருகிறார்கள். அவர்கள் அழகாக
இல்லாதவர்கள் போல இருந்த இளம் வயதை விடவும், அத்தனை தாத்தாக்களும் பாட்டிகளும், தோலில் ஆயிரம் சுருக்கங்களோடு பொக்கை வாயோடு இடுங்கின கண்களில்
சுடரும் அபூர்வ ஒளியோடு இப்போது அழகாகத்தானே இருக்கிறார்கள். ஒன்று நமக்கு அவர்கள் கையைப் பிடித்துக்
கொள்ளத் தோன்றுகிறது. அல்லது அவர்கள் நம்முடைய கையைப் பிடித்து அவர்கள் கைக்குள் வைத்துக் கொள்கிறார்கள்.
அப்பாவுக்கு அப்படிச் சுருக்கம் எல்லாம் விழுந்து விடவில்லை.
அப்பாவைப் பார்க்கும் போது, ஒரு சாயலில் தற்சமயம் அவர்
ஆர்.கே.நாராயண் போலவும், ஆர்.கே.லக்‌ஷ்மண் போலவும்
எல்லாம் எனக்குத் தோன்றுகிறது. அப்பாவின் மூக்கு நுனி
தன்னிச்சையாக ஒரு வாதமுடக்கி நெற்றைக் கடிக்கிற
பச்சைக்கிளியின் அலகு போல இருக்கிறது. அப்பாவைப் பார்க்கிற போது ஒரு பறக்கும் கிளிச்சத்தம் கேட்கிறது என்று கூடச் சொல்வேன்.
அப்படியான புகைப்படத்துக்கான தேடலில்தான், அப்பாவின்
88 வது பிறந்த தினத்தை அப்பா தன் நண்பர்கள் சிலரோடு எங்கள் வளவுக்குள்ளேயே கொண்டாடியிருப்பதைப் பற்றிய
பதிவு இருந்தது. அறிவரசன், சுபாஷிணி, கழனியூரன், திவான், பொன்.வள்ளி நாயகம், கிருஷி, இன்னும் ஏகப்பட்ட பேர்
அப்பாவைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள். சமீபத்தில் வார்னிஷ்
அடிக்காமல்,வெயிலிலும் மழையிலும் ‘அலரிப்போனநாலைந்து
மரத் தூண்கள் ஒருபக்கமும். வெள்ளையடிக்கப்பட்ட சதுரக்

கல் தூண்கள் மறுபக்கத்திலும் இருக்கும் அந்த வாசலில்,ஒரு
பத்துப் பதினைந்து பேர் பிளாஸ்டிக் நாற்காலிகள் இட்டு உட்கார்ந்து, பேசுகிறவர்களின் முகத்தை மிகக் கவனமாக உற்றுப் பார்த்திருக்கும் படங்கள் அவ்வளவு அழகாக இருந்தன. அங்கேயே பந்தல் போட்டு, ‘மணவடை கட்டி மூன்று தலைமுறைக் கல்யாணங்கள் நடந்த போதெல்லாம் கூட அந்த வாசல் இவ்வளவு அழகாக இருந்திருக்காது. நாங்கள் டில்லி சாய்பு என்று அழைக்கிற யுனானி மருத்துவரின் நரைத்த தாடியுடனான அன்றைய முகம் போலப் பேரழகுடைய ஒரு முகத்தை நான் அதுவரை பார்த்ததே இல்லை என்றே சொல்லவேண்டும்.
இப்படி எல்லோரையும், எல்லாவற்றையும் அழகாக்குகிற பொழுதாக அது இருந்திருக்கிறது.. அதனால்தான் ஒருவர் பாக்கி இல்லாமல் எல்லோரும் அப்பாவைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள். எல்லோரும் பேசினது கூடப் பெரிதில்லை.
அந்தப் பதிவு இப்படி முடிகிறது.
தி.க.சி.வீட்டு இல்லப் பணியாளர் தோழி.காந்திமதி, வளவு வீட்டு சகோதரி திருமதி. சுந்தரி ஆகியோர் தி.க.சி அவர்களின் பண்பு நலன் குறித்துப் பேசியது விழாவின் சிறப்பம்சமாக இருந்தது
அப்பாவை தி.க.சி என்று அறியாத. நடு வீட்டுத் தாத்தா என்று
மட்டும் அறிந்த அந்த சுந்தரியும், ஒரு ஐயாவாக ஒரு வயசாளியாக, ஒரு மனிதராக மட்டும் அறிந்த காந்திமதியும் அந்தப் பொழுதில்
பேசிய பேச்சு எவ்வளவு அருமையாக இருந்திருக்கும்.  சுந்தரி என்கிற வளவு வீட்டுப் பெண் சேர்ந்தாற்போல நான்கு வார்த்தைகள் ‘ஆம்பிளைகள் முன்னால’ இதற்கு முன்பு பேசியிருக்கவே மாட்டார்கள்.
காந்தி மட்டும் என்ன, தினசரி சாயுங்காலம் மைக்கைப் பிடித்துப் பேசிவிட்டு இறங்கிக் கொண்டிருப்பவரா என்ன? அவர்கள் இருவரும் என்ன
பேசியிருப்பார்கள்? அவர்களைப் பேசத் தூண்டின அப்பாவின் அம்சம் எது?
ஒரு வயதில், ஒரு கட்டத்தில், அப்படிப் பிரித்துப் பார்க்கவும் பிரித்துச் சொல்லவும் தனித் தனி அம்சங்கள் இன்றி, அந்த மனிதனே ஒரு பேரம்சம் ஆகிவிடுவார் போல.
அப்பா அப்படித்தான் அன்றைக்கு ஆகி இருந்திருக்க வேண்டும்.
அன்றைக்குக் காலை அப்பாவைப் போய் பார்த்துப் பேசிவிட்டுவந்தேன்.
ஆனால் அந்த சாயுங்காலத்தை நான் இழந்துதான் போனேன். முக்கியமாக, சுந்தரியின் பேச்சை, காந்தியின் பேச்சை எல்லாம்.
எனக்கு இப்போது அப்பாவைப் பார்க்கத் தோன்றுகிறது.
அப்பாவை விட காந்தி என்கிற, இதுவரை நான் பார்க்கவே பார்க்காத அந்த காந்திமதியை.





Tuesday 15 May 2012

ஒரு ஒற்றையடிப்பாதை, ஒரு மரம்.

நான் நேற்றுக் காலையில் இருந்து மிகுந்த துக்கத்துடன் இருக்கிறேன்.
இந்த வாழ்வில் நான் என்னளவில் அடைந்த துக்கங்களை விடக் கூடுதலாகவே இது இன்னும் இருக்கிறது. இது என் எழுத்து சார்ந்தது. எழுதியும் எழுதாமல் போனது குறித்தது.
சில் தினங்களுக்கு முன்னால் குருதேவையும் ஹெலென் கெல்லரையும்
பற்றி எழுதும் போது எனக்கிருந்த மன நிலையின் தீவிரம் நேற்றும் இருந்தது. விளையாட்டுப் போல, இன்றைக்கு ஏதாவது பதிவேற்றுவோமே
என்றுதான் துவங்கினேன். ஐம்பது வருடங்களாக எழுதுகிற ஒருவனுக்கு எங்கிருந்தாவது துவங்கி எங்காவது போய்விடத் தெரியாதா என்ன?
எழுத ஆரம்பித்தது என்னவோ, முழுப் பரீட்சை லீவுக்குத் தாத்தா வீட்டுக்கு வந்திருக்கிற என் பேத்தி அர்ச்சனா பற்றியும் பேரன் ஆதி பற்றியும் தான்.
ஆதியைப் பற்றிய முதல் வரியோடு துவங்கினதாகத்தான் ஞாபகம். ஆனால் அது எங்கெங்கோ என்னை இழுத்துக் கொண்டு போயிற்று. கவிதை குறித்தும், இந்த வாழ்வு குறித்தும் என அது அழகாக ,   பாறைக்காக விலகி, பாறைக்கு அப்புறம் இணைகிற நதியின் த்டம் என மிக அழகான சொற்களிலும் வரிகளிலும், அந்தந்த நேரத்தில் தோன்றிய இடங்களில் தன்னிச்சையாக முத்தமிட்டுக் கொண்டு, அந்தந்தக் கணத்தில்
தோன்றிய பாடல்களை இசைத்துக் கொண்டு, இக் கிளையில் இருந்து இன்னொரு கிளைக்கு மாறிக் கொண்டு, ஒரு பூ உதிர்த்து, ஒரு கனி கடித்துஅது வெயிலெனில் என் தெருக்கடைசி வரை பளீரிட்டு, அது மழையெனில் எங்களின் பூர்வீக வீட்டுப் புறவாசலில் கிடக்கிற கல்லுரலின்
நடுக்குழி நிரப்பி, பொருக்காடிய என் புண்களைத் தோண்டி,  தன் ரத்தம் பார்க்கும் தருணத்தின் தவம் பெருக்கி, அறியாதோர் வாத்தியம் இசைத்து.   டையாதோர்  தீச்சுகம் மிகுத்து, சுட்ட பழம் ஒதுக்கி, கெட்ட பழம் ருசித்து,
வேரோடி,  தேரோடி  விரிந்துகொண்டே போயிற்று.
ஆதியை முன்வைத்தும் அர்ச்சனாவை முன்வைத்தும் என்னை இடவலம்
அற்றுப் பார்த்துக் கொள்கிற பளிங்குப்பலகையாக அந்த ஏழரை மணி
வெளிச்சம் இருந்தது.  என் விலாப்புறங்களில் இவ்வளவு பெரிய சிறகுகளை நான் சமீபத்தில் உணர்ந்தது கிடையாது.. வரைந்துகொண்டிருக்கும் போதே ஒருபோதும் வரையும் ஓவியம் புலப்படுவதே இல்லை.  கடைசி வரி எது என அறியாக் கடலில் தான்
முதல் வரியின் கல் துணை பூட்டிப் பாய்ச்சப் படுகிறோம்.  அதுதான் வழக்கம்.  நேற்று அப்படி இல்லை. கடைசி வரியை என்னால் வாசிக்க முடிந்தது.  தக்கை அமிழ்வது தெரிந்தே தூண்டில் கடித்தேன்.
எப்போது என் காலடிப் பலகையை உருவினார்கள் என்று தெரியவில்லை.
என் மொத்த வரிகளும் ஒற்றைச் சொடுக்கில் தூக்கில் இடப் பட்டுவிட்டன.
ஒரு கால் உதறல் இல்லை. ஒரு தொடைப் பிறாண்டல் இல்லை.  மலம்
இளகவில்லை. விந்தொழுகவில்லை. ஆனால் முடிந்தது எல்லாம்.
எனக்கென்ன தெரியும்? இந்த நாலைந்து வருட மடிக்கணினிப் புழக்கத்தில்
தமிழில் தட்டெழுதத் தெரியும்.  ஒரு மென்பொருள், வன்பொருள் அறியாமல் என்னைப் போல் எத்தனை கோடிப் பேர் இருப்பார்கள் கணினிப் பயனீட்டிக்கொண்டு. அவர்களில் ஒரு சிலர் இந்த என்னுடைய திங்கட் கிழமைக் காலைத் துக்கத்தை உணரமுடிகிறவர்களாக இருப்பார்கள் என
நினைக்கிறேன்.
எத்தனை கடிதங்கள், எத்தனை கதைகள், எத்தனை கவிதைகள் எழுதியிருப்பேன் இதுவரை. அவற்றில் ஒன்றைக்கூட என்னால் மீண்டும் ஞாபகத்தில் இருந்து சொல்லவே இயலாது எனக்கு.  முந்தின வரியாக
எழுதியதை அடுத்தவரியில் நினைவில் இருத்தமுடியாதவனாகவே தொடர்ந்து இருக்கிறேன்.
முதன் முறையாக, கணினியில் நேரடியாக எழுதத் துவங்கியிருக்கும் இந்த சமீபத்திய பயிற்சிக்காக வருத்தப் படுகிறேன்.  என் நண்பர்கள், என் உறவினர்கள் குழந்தைகள் அவர்கள் கண்ணெதிரே விபத்துக்குள்ளாகி
இழந்து துடித்திருக்கிறார்கள்.  அவர்களின் அத்தனை துயரமும் விம்மலும்  நேற்றிலிருந்து என்னிடம் உண்டு.
எனக்கு கோபாலைத் தவிர யாரைத் தெரியும். அவனிடம்தான் சொன்னேன். அவன் அவனுடைய மகள் தரணியிடம் சொன்னான். கோபாலுக்கு எப்படி நான் கல்யாணியண்ணனோ அப்படித்தான் அவன் பிள்ளைகளுக்கும். நேற்று என்னவோ தரணி என்னை,’பெரியப்பாஎன்றாள். எப்போது எப்படிக் கூப்பிட
வேண்டும் என்ற நுட்பம் இந்தப் பெண்பிள்ளைகளுக்கு எப்படி வருகிறது என்று தெரியவில்லை.  அவ்வளவு இதமாக இருந்தது அந்தக் குரலும் அழைப்பும்.
அவளாலும் அந்தப் பக்கத்தை மீட்டுத் தரமுடியவில்லை.
அவள் வேறு ஒன்றைச் செய்தாள். அந்த நீல இடைஞ்சலை அப்புறப் படுத்தி விட்டாள். பாலைவெளியின் மணல்வரிகளையும் அந்த குத்துச்
செடியையும் அகற்றி விட்டாள். ஒரே ஒரு மரம் நட்டிருக்கிறாள். ஒரு ஒற்றையடிப் பாதையும் இட்டிருக்கிறாள்.
மீண்டும் நான் நடக்க வேண்டும்.