Monday 3 September 2012

ஒரு புதிய பறவை








இந்த முதல் வரியைத் தட்டச்சு செய்யும் போது, ‘கடவுள் அமைத்து வைத்த மேடை, கிடைக்கும் கல்யாணமாலை’ பாடல் போய்க் கொண்டு இருக்கிறது தொலைக்காட்சியில். கமலஹாஸன் ஓங்கிய பெருங்காட்டில், உயர்ந்தொரு ஆலமரத்தில் கிளிச் சத்தமிட்டுக் கொண்டு இருக்கிறார். ‘அதிலொரு ஆண்கிளி, அதனிடம் பெண் கிளி’ என்று பாடும்போது சுஜாதாவை நொடி நேரம் காட்டிவிட்டு, ஒரு பெண் குழந்தை முகம், கருப்புக் கண்ணாடியணிந்த பார்வையற்ற ஒரு பையனின் முகம் எனக் காட்சி படத்தில்  நகருமென்று ஞாபகம்.

இங்கே இந்தப் பிற்பகலில் கடவுள் அமைத்துவைத்த மேடை எதுவும் இல்லை. எந்த விகட கவிகளும் கதை சொல்லவில்லை. அவள் அல்ல, வெயில் ஒரு தொடர்கதை இந்த சிதம்பர நகரில்.

இன்று காலை திருச்செந்தூர் வரை, கோவை லாலா மாரியப்பன் வீட்டுக் கல்யாணத்திற்குப் போய் வருகிறேன். இரண்டு பக்கமும் செய்துங்க நல்லூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம், தென் திருப்பேரை, குரும்பூர், சோனகன் விளை, அம்மன்புரம் எங்கும் ஒரு வயலில் கூட நடவாகவில்லை. ஒரு புது வைக்கோலில் அடிக்கும் வெயிலின் மினுங்கும் நிறத்திற்கும்.  எப்போதோ அறுவடையான அடித் தாளோடு மல்லாந்து கிடக்கும் வயலின் உலர்ந்த விலாவைத் தன் அலகால் கொத்தி இழுக்கும் வெயிலுக்கும் எத்தனை வித்தியாசம். ரோட்டு ஓரத்தில், இனிமேல் காற்றுக்குக் கிழிய மிச்சமில்லாத வரிகளுடன், ஒரு பைத்தியக்காரியின் கோலத்தில் அசையும் வாழைகளை வெயில் ஒரு ’பச்சைக் காட்டேரி’ போல உறிஞ்சி இருந்தது. எத்தனையோ முறைகள் திரும்பத் திரும்பப் பார்த்து மனதுள் மிகப் பசுமையாக வரையப்பட்டிருந்த சில நிலக் காட்சிகளை ஒரே ஒரு பேருந்து சன்னல் நகர்வில் முற்றாக இழப்பது என்பதும் வெயிலுக்கு இப்படி அனைத்தையும் காவு கொடுப்பதும், என்னை நொறுங்க வைத்தது/

கவிஞர்  வைரமுத்து ஒரு திரைப்பாடலில், ‘தூக்கி வளர்த்த துயரம்’ என்பார். நான் பயணச் சீட்டெடுத்த துயரமிது.  சற்றே விழுதுகள் தொங்கும், பெரும்பகுதிக் கிளைகள் வெட்டப் பட்ட ஒரு ஆலமரத்தின் சாய்ந்த நிழலில், சைக்கிளில் பிளாஸ்டிக் குடங்கள் வியாபாரம் செய்யும் ஒருவர் படுத்துக் கிடந்தார். அவர் எதையும் குடித்திருக்க மாட்டார். வெயில்தான் அவரைக் குடித்திருந்திருக்கும்.  தலை நசுங்கக் கொன்று வீசப்பட்ட ஒரு தண்ணீர்ப் பாம்பின் தொய்வு இருந்தது அவர் உடலில். ஒரு தண்ணீர்ப் பாம்பை எப்போது கடைசியாகப் பார்த்தேன் என்று நீங்கள் கேட்டால் என்னால் உடனடியாக அல்ல, எப்போதுமே பதில் சொல்ல முடியாது.

எங்கே வரவேண்டும் என்று எழுதத் துவங்கினேனோ அங்கே தான் வருகிறேன். தண்ணீர்ப் பாம்பைக் காணோம். மண் புழுவைக காணோம்.   ஆண் கிளி, பெண் கிளிகளைக் காணோம். வெயிலில் ஒரு காக்கை, இன்னொரு காக்கை இரண்டும் மட்டும் கரைந்து கொண்டே இருக்கின்றன. பொழுது போகாத பழைய சூதாடிகள், தன்னையே இரண்டு பேராக எதிர் எதிர் அமர்த்தி, குருட்டு ரம்மிகள் ஆடுவது போல, இந்தக் காக்கை கூட
எதிர் காக்கையாகவும் மாறிக் கரைந்துகொண்டிருப்பதும் ஒரு பின் நவீனத்துவப் பிற்பகலில் நிகழக்கூடியதே.

காக்கைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.  சீனிக்குமார் வீட்டு வேப்ப மரத்தில் ரொம்ப நாளாக ஒரு காக்கைக் கூடு உண்டு.  மின்சார கம்பியிழை படுகிறது என  அவ்வப்போது வெட்டிவிடப்படுகிற எங்கள் தெரு வேப்பங் கன்றில் ஒரு காக்கைக் கூட்டைப் பார்க்கச் சந்தோஷமாக இருந்தது. சின்ன வயதில் பிள்ளை உண்டான முகத்துக்கு ஒரு அழகு இருக்குமே அப்படி.

ஏற்கனவே சிட்டுக் குருவிகள் காணாமல் போய் வெகு காலம் ஆயிற்று. மாசு பட்டு வரும் சுற்றுப் புறச் சூழல், பாரதியின் வரிகளை நாமறியாது நம்மிடமிருந்து களவாடுவதை நாம் அறியவேயில்லை. முன் தினம் எத்தனை துக்கத்துடனும், முன் இரவு எத்தனை தூக்கமற்றும் கழிந்திருப்பினும், அதை ஒன்றுமற்றதாக்கும்  உங்கள் இன்றையதினத்தின் தரையில் தத்தித் தத்தி ஏழெட்டாக நகர்ந்து, தவ்வி, பறக்கும் ஏழு சகோதரிக் குருவிகளையும் அனேகமாக இப்போது காணோம். காம்பவுண்டுச் சுவரில் இருக்கும் சாம்பல் பூனைகளின் கனவில் மட்டுமே நந்தியாவட்டை நிழலில், சோழிகளைப் போலத் தன்னை விசிறி, தானே அள்ளிக் கொள்ளும் அந்தத் தவிட்டுக் குருவிகள் நடமாடுகின்றன.

இதைத் தவிர,  தானாகத் தன் காரியம் பார்த்துக் கொள்ளும் எளிய பறவைகளாக மிஞ்சுவது மைனாக்கள் மட்டுமே. அவையும் செழிப்பாக இல்லை. சோகையாக, மெலிந்து, துன்பமிலாத நிலையே சக்தி என்று நடமாடிக்கொண்டு இருக்கின்றன. மைனாக்கள் தான் நான் அதிகம் இப்போது அடிக்கடி பார்க்கமுடிகிற பறவையென ஐந்தாண்டுகளுக்கு முன்பு நஞ்சப்பன் அவர்களிடம் சொன்ன உண்மை இப்போது சற்றுத் திரிந்துவிட்டது.  புறநகர்ச் சாலையில் அடிபட்டு நசுங்கிக் கிடக்கும் அளவுக்கு எண்ணிக்கையில் அதிகமிருந்த மைனாக்களின் நிலை இப்போது அப்படியில்லை. நாம் எப்போதுமே அழிகிற இனங்களைத் தானே கணக்கெடுப்போம். மைனாக்களின் சரணாலயம், மைனாக்கள் நல வாரியம் எல்லாம் அப்புறம்தானே வரும்.

எந்தக் கவலையும் இன்றிப் பலுகிப் பெருகுவது இந்தப்  புறாக்கள் தான்.  கல்வெட்டாங்குழி தாண்டி உள்ள, அரசு உணவு தானியச் சேமிப்புக்கிடங்கு
தனக்கு மேல் உள்ள வானத்தில் அவ்வப்போது நூற்றுக்கணக்கான புறாக்களைக் கலைத்து வீசுவதை. இன்னும்  தொடர்ந்து பெருங்கருணை மிக, அளித்துக்கொண்டே இருக்கிறது. தண்ணீர் வட்டங்களிட்டு அமைதி கொள்வது, மேகங்கள் கலைந்து நகர்வது, இப்படிப் பறவைகள் கலைந்து கலைந்து வானில் சுழலும் சித்திரங்களை வரைவது, ஒரு பெரும் அரச மரத்தின் அத்தனை இலைகளும் தனித்தனியாக அசைவது,  தீ வளர்வது,  தீ தணிவது எல்லாம்  காணமுடிகிற தினங்களும் காண  அனுமதிக்கிற வாழ்வும், சாயுங்காலங்களின் கருக்கல் அழகை முற்றிலும் இழந்துவிட்ட கணினிச் சந்ததியர்க்குக் கிடைக்குமா? 

மீண்டும் விலகிப் போகிறேன். நான் பறவைகளில் துவங்கினேன். ஒரே ஒரு
பறவையை, சிவாஜி பட நினைவுடன் சொன்னால், ‘புதிய பறவை’யைப் பற்றிக் குறிப்பிடவே விரல்கள் விரும்பின.

இரண்டு வருடங்களுக்கு முந்திய மழைக்காலத்தில்தான் அந்தப் பறவையைப் பார்த்தேன். மழைக் காலம் முடிந்து தண்ணீர் அங்கங்கே தேங்கிக் கிடந்த பருவம். சவேரியர் தெரு முடிகிற, சாராள் தக்கர் கல்லூரிக்குப் பிந்திக் கிடக்கிற மைதானத்தின் செம்மண் பரப்புத் துவங்கும் இடம் அது. பெரும்பாலும் வேப்பமரங்கள் அடர்ந்த தெரு மருங்குகள்.
ஒரு காலை நடையில் அந்த அற்புதம் நிகழந்தது.  ஏற்கனவே நிகழ்ந்து கொண்டிருந்த அற்புதத்தின் காட்சியில், அந்த நிமிடத்துப் பாத்திரமாக நானும் மேடையில் இடப்புற நுழைவு செய்தேன்.

அங்கிருந்த தந்திக் கம்பிகளில் நூற்றுக் கணக்காக, ட்ரில் வாத்தியார் உட்காரச் சொன்னது போல, கீழ்ப்படிவுடன், அந்தக் குருவிகள் அமர்ந்து இருந்தன. குருவிகளை விடப் பெரியவை. மீன் கொத்தியின் சிறகு நிறங்கள் உடையவை. ஆனால் மீன்கொத்தியை விடச் சிறிய உடல். நல்ல வலுவான அலகைப் பார்த்தால், கொத்தித் தின்னும் உணவுப்பழக்கம்
உடையதாக இருக்க வேண்டும். வால் மட்டும் இல்லை. வாலில் ஒரு கம்பியைச் செருகின மாதிரி, ஒரு ஒற்றை வளர்ச்சி. நான் இந்தப் பக்கம் இதுவரை பார்த்தே இராத பறவை. மழைக்காலம் முழுவதும் இங்கேயே
இருந்தது. காலையில் தந்திக் கம்பிகளில் பள்ளிக்கூடம் நடத்தும். மாலை குறிப்பிட்ட, அதிக உயரமற்ற இரண்டே இரண்டு வேப்பமரங்களில் மட்டும் அடையும்.  மழைக்காலம் முடிந்து பனிக்காலத்தில் கூட இருந்தன. வெயில் வந்ததும் ஒன்றைக்கூடக் காணோம். சொல்லிவைத்தது போல, மறுபடியும் அடுத்த மழைக்காலத்தில் வந்தன. அதே தந்திக் கம்பிகள். அதே வேப்ப மரங்கள்.

அந்த இரண்டு மழைக் காலங்களிலும் என்னிடமிருந்து  குறுஞ்செய்திகள்   பெற்ற யாருக்கும் அந்தப் பறவைகள் பற்றிய ஒன்றிரண்டு வரிகளாவது இல்லாமல் போயிராது.  என் அந்தப் பருவத்தைய காலைகளில் நான் அதன் சிறகுகள் அணிந்து திரிந்துகொண்டிருந்தேன்.  என் மழைக்கால வானம் வெளிவாங்கிய பின்னும் கூட, நான் கூட்டம் கூட்டமாக அந்த பெயர் தெரியாத பறவைகளை எனக்கு உள்ளும் வெளியும் பறக்கவிட்டுக் கொண்டே இருந்தேன்.  அதன் பெயரை எனக்கிட முடியாததால், என் பெயரையே அதற்கு இட்டுக் கொண்டதும் உண்டு.

யாரிடம் கேட்டும் தெரிந்து கொள்ள முடியாத அந்தப் பறவையின் பெயரை அறிய,  அவை நாயகன் தன் ஓசை வெளியீடாகப் பதிப்பித்து
நமக்குக் கொடுத்திருக்கும் காடுறை உலகம் புத்தகத்தின் 67-ம் பக்கம் வரை காத்திருக்க வேண்டியதிருந்தது. அதே பறவை. அதே கூர் அலகு.
வாலில் அதே போல ஒற்றைக் கம்பி. உன்னை நான் பார்த்ததே இல்லையே என்று என்னிடம் சத்தியம் செய்வது போல அது ஒரு முட்கிளையில் ஏகாந்தம் பயிலும் படம். உலவும் பூச்சிகள்/ பல்கிப் பெருகாமல்/ பறந்துண்டு கட்டுப் படுத்தக்/ காட்டில் அலையும்/ பஞ்சரட்டை ..
என்ற அவை நாயகனின் குறிப்பு.

இது ஒரு வரத்துப் பறவையாக வந்திருக்கும் எனில் எனக்குக் கூடுதல்  மகிழ்ச்சிதான். அதனதன் வாழிடத்தில் பூச்சி புழுக்கள் மறுக்கப் பட்ட
‘ஒரு துரத்து பறவை’யாக பஞ்சரட்டை புலம்பெயர்ந்திருக்கும் எனில் துயரம் தருவது தான். புலம் பெயர்ந்தவர் மேல் நாம் கொள்ளும் அக்கறை
எவ்வளவு என்றுதான் நமக்குத் தெரியுமே.

இதோ இது செப்டம்பர்.  அக்டோபர் நவம்பரில் மழை பெய்யாதா போகும்.? நான் செம்மண்ணை நம்புகிறேன். மண் புழுக்களை நம்புகிறேன். எனவே பஞ்சரட்டைகளையும் நம்புகிறேன். அவை நிச்சயம் வரும். அவை அமர்வதற்கான தந்திக் கம்பிகளையும், அந்த இரண்டு மரங்களையும் இன்றைக்கு அடிக்கிற வெயில் துடைத்து வைக்கும் .

வெயிலை என்னால் எப்படி நம்பாமல் இருக்க முடியும்?

%




1 comment:

  1. எப்போதோ அறுவடையான அடித் தாளோடு மல்லாந்து கிடக்கும் வயலின் உலர்ந்த விலாவைத் தன் அலகால் கொத்தி இழுக்கும் வெயிலுக்கும் , வாழைகளை வெயில் ஒரு ’பச்சைக் காட்டேரி’ போல உறிஞ்சி இருந்தது தலை நசுங்கக் கொன்று வீசப்பட்ட ஒரு தண்ணீர்ப் பாம்பின் தொய்வு இருந்தது அவர் உடலில் ---- நம் ஒட்டுமொத்த புத்தியில் உறைக்க

    ReplyDelete