Saturday 30 June 2012


அவரவர்.

முன்னறிவிக்கப்படாத
மின்தடை இரவின் அடர்த்தியை
எந்த மனப் பிறழ்வு இன்றியும்
நீங்கள் அறிவீர்கள்.
அகவிருள் அகற்றியபடி
அசையாதிருந்தது
பரணிலிருந்து அன்றாடப்
பயன்பாட்டுக்கு வந்திருக்கும்
அம்மாவின் அம்மாவின் சிற்றகல்.
முன்னகர்ந்து பின்னகர்ந்து
மூதாதித் தொடர்மலையின்
தீ வரை எரிந்தது திசையெலாம்.
எது தூண்டிற்றோ
இந்த வினை செயல்?
இதுவரை கையில்வைத்து ரசித்த
என்னுடைய மார்பளவுப் ப்டம்
கருகிச் சுருள்கிறது
இரு விரல்களின் இடையில்.
நீங்களும்            
ஒருமுறையேனும் முயல வேண்டும்
அவரவர் நிழற்படத்தை
அவரவரே சாம்பராக்கும்
அலகிலா விளையாட்டை.

%


 நிசிச் சப்தம். 

எத்தனையோ வருடங்களுக்கு
முன்பிருந்த வீட்டின் வாசல்.
பாழும் இந்த பகலிரைச்சலிலும்
கேட்கமுடிகிறது
இறந்தகால நிசிச் சப்தத்துடன் உதிரும்
நெட்டிலிங்கக் கொட்டைகளைத்
துல்லியமாக.
இனியொருநாள் இதே போல
கிளைமாறும் கரும்பறவையிலிருந்து
கழன்று விழும் இறகுச் சப்தம்
காதில் விழுமெனில்
அத்துடன் செத்தே போவேன்
பித்தாகி
செஞ்சடை மேல் வைத்த என்
தீ வண்ணனே.

%

அமைதல். 

தெரியும்.
உங்கள் பாற்கடலில் எஞ்சியதும்
உங்களுக்கு ஒரு துளி விஷமே.
அவனுக்கும் இவனுக்கும் உவனுக்கும்
இதே ஆலகாலம் தான்.
தெரியாததல்ல
என்னுடைய குவளைக்கு மாற்றும்
உங்களின் இடைவிடாத
எத்தனங்கள் எல்லாமும்.
நான் கடைந்த நீலம்
ஒற்றைச் சிறு பூவாக என்
உள்ளங்கையில் மலர்ந்திருக்கிறது.
பொறுங்கள்.
வாடிவிடும் முன்னர் அதைச்
சூடிவிட்டு வருகிறேன்,
பெயக் கண்டு நஞ்சுண்டு
அமைய.


%


யாரை. 

வேப்பம் பூ அடர்த்தியாக்கிய
வேனில் இரவு.
வழக்கமான மின்மினிகள்
தேய்பிறை வானத்தில்.
ஒரு பெரும் இடைவெளி தாண்டி
இந்த இடத்தில் எனக்கு
நாற்காலி இட்டிருக்கிறது தனிமை.
என்னை வீடுகடத்தும்
உதிர்பூவின் வெள்ளைச் சத்தம்..
குழந்தையழுகையிட்டு
நந்தியாவட்டையின் கீழிருந்த பூனை
நகர்ந்து வந்து புறங்காலை
நக்கத் துவங்குகிறது.
எனக்குத் தெரியவில்லை
யாரை இழுத்தணைத்து இப்போது
ஒரு கசப்பு முத்தம்
இடப் போகிறேன் என்று.


%

கல்யாண்ஜி
உயிர் எழுத்து - 2012.

1 comment:

  1. உங்கள் எழுத்து எனக்கு மனோரஞ்சிதப் பூ மாதிரி சார். இதோ வெறுமையும், கசப்புமான இந்தத் தருணத்தில் இன்னும் வெறுமையும், கசப்பும் கூட்டுகிற மாதிரி இருக்கும் இது, வெனசா மேயின் துள்ளும் வயலினிசைக்குப் பிறகோ, போசலியின் உயிர் உலுக்கும் ஆபராவின் முடிவிலோ எனை ஏந்தி எங்கோ கொண்டு செல்லும். உயிர் உருக ஜெயஸ்ரீயின் பாடலின் தொடர்ச்சியாய் பிறிதொரு நாள் தாய்மடியில் உறங்கும் அமைதி தரும். எழுத்தா இது? மனசில்லையா? அப்படித்தான் இருக்கும் என்று நீங்கள் சொல்வதாக நானே சொல்லிக் கொள்கிறேனே:)

    ReplyDelete