Friday 15 June 2012

காற்றில் அசையும் சுடர்.



பரிச்சயமற்ற நிழல்.

திறந்து கிடக்கிறது வீடு.
உங்களுக்குப் பரிச்சயமானவர்
பெயரைச் சொல்லிக்கொண்டே
முதல் அறையில் நுழைகிறீர்கள்.
உங்களுக்குப் பரிச்சயமானவரின்
பெண்குழந்தை பெயரை அழைக்கையில்
காற்றில் அசையும் ஒரு அகல் சுடரும்
கை அகலச் செம்பருத்தியும
உங்களைப் பார்க்கின்றன.
உங்களுக்குப் பரிச்சயமானவரின்
மனைவி பெயரை நீங்கள் அறிவீர்கள்.
கிளர்ச்சியுடன் அதை உச்சரிக்கும்
பெருவிருப்பைக் கட்டுப்படுத்திக் கொள்கிறீர்கள்
படுக்கையறை எங்கிருக்கும் எனும்
உத்தேசமான தேடலை
உங்களால் தவிர்க்கமுடியவில்லை.
உங்களுக்குப் பரிச்சயமானவரின் மனைவி
உங்களைப் பெயர் சொல்லி அழைத்தபடி
குளியலறையை வெளியேறும் காட்சியை
உங்களின் ஒளித்துவைக்கப்பட்ட காமம்
அவசரமாக வரைகிறது.
நீங்கள் கிணற்றடிக்கே போய்விட்டீர்கள்.
கருநீலப் பூ கனத்துத் தொங்கும்
வாழைமரத்தில் ஒரு காகம்
சாய்ந்த பார்வையில் கண்காணிக்கிறது உங்களை.
கூசச் செய்யும் வெயில் மீறி
அது உங்களுக்குப் பரிச்சயமானவரின்
சாயலில் இருப்பது பிடிபடுகிறது.
திறந்துகிடந்த வீட்டைவிட்டு நீங்கள்
விரைந்து உடனடியாக
வெளியேறிவிடுகிறீர்கள்.
பரிச்சயமற்ற உங்கள் நிழல் ஒன்று
அங்கு உதிர்ந்துகிடக்கிறது என்பது
உங்களுக்குத் தெரியாது.

%

ஏற்கனவே

ஏற்கனவே இறந்துவிட்டார் என
உறுதிசெய்து மருத்துவர் அகன்றதும்
ஏற்கனவே இறந்தவரின்
நாட்குறிப்பைப் பார்த்தோம்.
‘ஏற்கனவே இறந்துவிட்டேன்
என எழுதப்பட்டிருந்தது
ஏற்கனவே அதில்.

%

ஒரு வானத்தை.

மூடிய அறை
ஒரு பொருட்டல்ல ஓவியனுக்கு.
ஒரு பறவையை வரைகிறான்.
பறந்து அது
ஒரு வானத்தை
உண்டாக்கிவிடுகிறது
உடனடியாக.

%

கல்யாண்ஜி
உயிர் எழுத்து - ஏப்ரல். 2012.








1 comment:

  1. அம்மன் சன்னதி , மஞ்சன வடிவு, வசந்த மண்டபம் தாண்டி
    தட்சினா மூர்த்தி தாண்டியவுடனே

    சண்முகம் சற்குணம் சைவ என
    மனது முருகரை குறித்து பேச தொடங்கி விடும்

    அது போல

    எனது கூகிள் ரீடரில் எட்டயபுரம், நன்றி காட்சிப் பிழை

    தாண்டி சமவெளியை க்ளிக்கிய உடனேயே

    அருமை, அற்புதம் சார் என்ற எழுத்துக்களை விரல்கள் தேடி விடுகிறது தினமும்

    ReplyDelete