Thursday 7 June 2012

நகர்ந்த பிறகு

என்னதான் வெயில் என்றாலும், இந்தக் கோடை காலத்தைப் பிரிவது
ஏதோ ஒரு துயரத்தையே தருகிறது.  ஒரு பூக்காரன்  ஆக  நான்
அறிந்திருக்கும் மல்லிகையையும் ஒரு தோட்டக்காரன் என  நான்
பறிக்கிற இருவாட்சியையும் போல என்னையும் என் வியர்வையுடன்
இந்தக் கோடை மட்டுமே  பூக்கவைக்கிறது.  வியர்த்த மிருகத்தை, வியர்த்த மனிதனை நாம் உற்றுப் பார்த்தால் இந்தக் கோடைகாலத்தையும் உற்றுப் பார்த்தவர்கள் ஆவோம். 

வெயில் நகர்ந்துகொண்டே இருக்கிறது, எல்லாம் நகர்வது போல. நிழல் நகர்வதன் மூலம் வெயில் நகர்வதை அறிகிறவர்களாக மட்டுமே நாம்
இருக்கிறோம்.  அது தேவர் குளமோ பனை விடலிச் சத்திரமோ, ஏதோ
கடன் வசூலுக்காக அலுவலக ஊர்தியில் போயிருக்கிறேன்.  எங்களை விட, எங்கள் ஓட்டுநர்களுக்கே கடன்தாரர் முகங்களும்  வீடுகளும் அத்துபடி. விசாரித்து வர அவர் போயிருக்கிறார்.  நான் நாங்கள் கடனுதவி செய்த
இயந்திரக் கலப்பை அருகில் நிற்கிறேன்.  ஒரு விவசாயியின் எல்லா
இடு பொருட்களுக்கும் உயிரும் ஆன்மாவும் உண்டு, அந்த இயந்திரக் கலப்பை, தன் அத்தனை துருவோடும், கரிசல் மண்ணோடும் என்னை
ஒரு வேட்டைநாயைப் போலக் குரைத்துத் துரத்தத் தயாராக இருக்கிறது.
அதனுடைய எஜமானனை ஒருபோதும் காட்டிக் கொடுக்காது அது  என எனக்கும் தெரியும். நான் வெறுமனே நிற்கிறேன்.

வெறுமனே என்று சொல்கிறோமே தவிர, அது எப்படி வெறுமனே நிற்க
முடியும். அதுவும் இப்படி வெயில் அடிக்கிற, சொல்லப்போனால் நெஞ்சு
முழுக்க நிரம்பும் ஒரு வேளாண்மை வாடையடிக்கிற தெருவில் சும்மா
நிற்பது என்பது உயிருள்ள யாருக்கும் இயலாதது.  நான், பெரும்பாலும்
மண்ணால் கட்டப் பட்டிருக்கிற, குடி தண்ணீர்க் குழாய் சரியாக மூடப் படாமல் தண்ணீர் பெருகிக் கொண்டிருக்கிற, ஆள் நடமாட்டமற்று எனக்கு இடபுறம் ஒரு கிழிந்த துணிபோலக் கிடக்கிற தெருவில் வெயில் நகர்வதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.  ஒரு கண்ணில் அறுவைச் சிகிச்சை செய்து, பச்சை நிற படுதா போட்டிருக்கிற ஒரு வயசாளி மட்டும், தூரத்தில் அவரின் காலடியில் மிகச் சிறிதாகப் பதுங்கும் நிழலை இரும்புக் குண்டு போல இழுத்துக் கொண்டு போகிறார்.  அவருடன் வெயிலும் போய்க் கொண்டு இருந்தது. இற்றுப் போன கூரை ஓலைவிளிம்புகள் நடுங்கும் மண் சுவர்களில் எட்டிப் பார்த்து மினுங்கும் ஒரு சப்பையான வெள்ளைக்கல் மீது, ஒரு பறவை நிழல் போல வெயில் நகர்வதைப் பார்த்த பிறகு,கடன் வசூலாவது ஒன்றாவது.  திரும்பி அலுவலகம் வரும்வரை நான் ஒரு வார்த்தை  கூடப் பேசவில்லை.  கல் குவாரிகளில் மினுங்கிக் கெக்கலிக்கும் வெயிலுக்கும்,    அந்த மண் சுவற்றுச் சப்பைக் கல்மீது நகர்ந்த வெயிலுக்கும் எத்தனை வித்தியாசம்.

எந்த ஜன்னல் வழியாக வந்ததோ, சொந்த வீடு மாதிரி நடமாடியதோ அதே ஜன்னல் வழிதான் வெயில் வெளியேறியிருக்கவும் வேண்டும்.  பூமிக்கும் சூரியனுக்கும் ஊடே வெள்ளி இடை நின்றதைக் கோளரங்கில் காத்துக் கிடந்து உருப்பெருக்கியில், தொலைநோக்கியில் பார்த்து,  ஆங்கிலத்தில் மகிழ்ச்சிதெரிவித்த நகரக் குழந்தைகள், தினம் தினம் நகர்கிற இந்த வெயிலை ஒரு தடவை கூடப் பார்த்திருக்க வாய்ப்பில்லை.  ஊடகங்கள்
மட்டும் என்ன? இந்த முழுக்கோடையிலும் ஒரே ஒரு நாளாவது வெயில் நகர்வதைக் காட்டியிருக்குமா?  ஒரு கோடை காலப் பறவையை,  சித்திரை
வைகாசியில் நடக்கிற ஒரு முத்தாரம்மன் கோவில் கொடையை,  பனை மரத்துப் பொந்துக்குள் இருந்து வெளியே பறக்கும் ஒரு பச்சைக் கிளியை, வெம்பரப்புக்குள் ஓடி, அப்படி  ஓடிய ஓட்டத்தின் விதிகளில் ஏதோ தப்பு நேர்ந்துவிட்டது போல நின்று, மறுபடியும் ஓடுகிற ஒரு ‘ஓந்தானை’க் காட்டினாலே கோடையைக் காட்டினது போலத்தான், காட்டியிருக்குமா?

காட்டினாலும் காட்டாவிட்டாலும் வெயில் நகர்ந்து கொண்டு இருக்கிறது. பருவம் மாறிக் கொண்டிருக்கிறது.  ஒரு கிராமத்து வீட்டில் வேயப் பட்டிருக்கிற கொல்லம் ஓட்டு வளைவுகளில் மழையும் பனியும் வெயிலும் காற்றும் எழுதுகிற வரிகளை வாசிக்கமுடிகிறவர்களாக,  வரையும் சித்திரங்களை அவதானிக்க முடிகிறவர்களாக, அந்தந்தப் பருவத்தில் விளையும் தானியங்களைக் கொத்தித் திரியும் பறவைகளாக இருப்பது பற்றி எஸ். ராமகிருஷ்ணனும் நானும் பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முந்திய சென்னை நாட்களில் பேசிக் கொண்டிருந்தோம்.
சரியாகச் சொன்னால், ராமகிருஷ்ணன் பேசினார். நான் அதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.  நம்முடைய வாத்தியத்தில் வாசிக்க நினைக்கிற இசை
முழுமையையும் தன்னுடைய வாத்தியத்தில் வாசித்துமுடித்துவிடுகிறவர்
தானே அவர்.    ஒரு சீன, அல்லது ஜப்பானிய மனநிலையில் அன்றைக்கு அவர் இருந்தார்.  அன்று சொல்லியதை அன்றைக்கு அவர் எழுதியிருப்பின் அது ஜப்பானிய வரிவடிவத்தில் மேலிருந்து கீழாக இருந்திருக்கும்.  அவர்
வசம் இன்றும் ஒரு மூங்கில் மூச்சு எப்போதும் இருக்கிறது.

பருவம் நுழைவது, பருவம் வெளியேறுவது, இரு பருவங்களின் சேர்மானம்
என இவ்வளவு சொல்கிறேன். இதை எழுதும் போது, சரியாகக் கொக்கிகள் இடப்படாத ஜன்னல் கதவுகளில் ஒன்று, அறைந்து சாத்திக் கொள்கிறது. கொலுசு ஒலிப்பது போல, இன்னும் தன் புராதனம் மாற்றிக் கொள்ளாத
கொக்கிகள், வலிக்காமல் கண்ணாடிக் கதவுகளில் மோதி, உலோக ஒலி
எழுப்புகின்றன. எல்லாம் நன்றாகத்தான் இருக்கின்றன. ஆனால் எதுவும்
நன்றாகவே இல்லை. எதற்கு வெயில் போக வேண்டும், காற்று வர வேண்டும்?

வெயிலை விலையாகக் கொடுக்காமல் இந்தக் காற்றைத் தருவிக்கவே முடியாதா?   கொடுத்தும் கொளல்வேண்டியதா காற்று?  இப்படிக் கேள்வி
கேட்கிற நேரத்தில், விடைபெறும் வெயிலுக்குக் கை அசைத்து நிற்கலாம்..  வெயிலாக இருக்கட்டும். ரயிலாக இருக்கட்டும், நகர்ந்த பிறகு நம் மீது கவிகிற பெரும் துக்கம் இருக்கிறதே.  அது அந்தத்  தண்டவாளங்களுக்குத் தெரியும்.  இந்தக் காற்றுக்குத் தெரியுமோ என்னவோ?


2 comments:

  1. கொளுத்தும் வெயிலில் கும்மாளமிட்டு வெயிலோடு விளையாடிய குதூகலப் பொழுதுகள் நினைவில் வந்து போகின்றன. எனினும் சுட்டெரிப்பதில்லை வெயில் கால நினைவுகள்.

    பச்சை ஓலையில் பொதிந்து அப்பா வாங்கித் தந்த நுங்குகள் தின்று உடம்பெங்கும் தேய்த்தும் மண்பானைகளில் பதநீர் நிறைத்து தோளில் சுமந்து வரும் வயசாளிக் கிழவனிடம் சொம்பு நிறைய பதனீர் குடித்தும் சேக்காளிகளோடு இளந்தீயில் பனம் பழம் சுட்டும் அம்மா அவித்துத் தந்த பனங்கிழங்குகளையும் பனைவெல்லப் பணியாரங்களையும் உண்டும் களித்தும் பொழுதெல்லாம் விளையாடித் திரிந்த வெயில் கால நினைவுகளால் மனசெங்கும் வீசுகிறது நறும் பனை வீச்சம்.

    ReplyDelete
  2. ஒரு கிராமத்து வீட்டில் வேயப் பட்டிருக்கிற கொல்லம் ஓட்டு வளைவுகளில் மழையும் பனியும் வெயிலும் காற்றும் எழுதுகிற வரிகளை வாசிக்கமுடிகிறவர்களாக, வரையும் சித்திரங்களை அவதானிக்க முடிகிறவர்களாக,

    என்ன அற்புதமான வரிகள் சார்

    ReplyDelete